சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கல்கிஸை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவுக்கு அமைவாக சடலமானது நாளை இவ்வாறு தோண்டி எடுக்கப்படவுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30 மணிக்கு இவ்வாறு சடலமானது தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில் தற்போது பொரளை கனத்தையில் உள்ள லசந்தவின் கல்லறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அப்போது முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் சிக்கல், முரண்பாடுகள் உள்ளதால் அதனை நிவர்த்தி செய்ய இவ்வாறு சடலமானது தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தின் முக்கியமான பல விசாரணைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. அதன்படி வர்த்தகர் ஷியாம் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை கைதியாக இருந்;து வரும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) வாஸ் குணவர்தனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் சிறைச்சாலையில் இந்;த விசாரணைகள் நடத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.
இதனை விட வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் சதித்திட்டம் மற்றும் சான்றுகளை அழித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவிடமும் லசந்;தவின் கொலை தொடர்பில் விசாரணை நடத்த முயற்சிக்கப்படுவதாக அறியமுடிகின்றது.
படுகொலையின் பின்னர் லசந்;தவின் காரில் இருந்;து எடுக்கப்பட்டு பல பொலிஸ் உயர் அதிகாரிகளின் கைகளுக்கு மாறியதாக கூறப்படும் லசந்;தவின் குறிப்புப் புத்தகம் இறுதியாக அநுர சேனநாயக்கவின் கைகளுக்கு கிடைத்துள்ளதாக கருதப்படும் நிலையிலேயே இந்;த விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
லசந்;த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவிசெனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவின் கீழ் இடம்பெற்று வருகின்றன. பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா, சுதத் குமார ஆகியோர் இந்;த விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றனர்.
Post a Comment