ராம்குமாரின் சடலம் இன்று பிரேத பரிசோதனை

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் இன்று செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-இல் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை கடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.
நீதிபதி விசாரணை: இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வந்தார்.
அப்போது, மின்சாரம் பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்கள் உள்ளிட்டவை குறித்து ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, காலை 10.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு தற்கொலை சம்பவம் நடைபெற்ற புழல் சிறைக்கு காலை 11 மணிக்குச் சென்றார்.
அங்கு, காலை 11.20 மணிக்கு சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் உள்பட அதிகாரிகள், பணியாளர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
பின்னர், சிறையில் ராம்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பணியாளர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, ராம்குமார் மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சமையலறை அருகே மின்பெட்டி இருந்த இடம், அவர் அடைக்கப்பட்டிருந்த தனி அறை உள்ளிட்ட இடங்களை நீதிபதி பார்வையிட்டார்.
மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் பிச்சைமுத்து, சிறை மருத்துவர் நவீன், சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், துணை கண்காணிப்பாளர் குமரேசன், சிறை அலுவலர் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக பிற்பகல் 2 மணி வரை விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக நீதிபதி தமிழ்ச்செல்வி அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்காக மருத்துவர்கள் காத்திருப்பு: இந்த நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நசீர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் காலை 7.30 மணி முதலே பிணவறை பகுதியில் காத்திருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீதான விசாரணையின் தீர்ப்புக்காக, பிரேதப் பரிசோதனை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் அறிவியல் துறை பேராசிரியரையும் நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பிட்ட மருத்துவப் பேராசிரியரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
இந்த நிலையில், நீதிபதி தமிழ்ச்செல்வியும் சிறையில் விசாரணையை முடித்து விட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தார்.
பெற்றோர், உறவினர்கள் வரவில்லை:இருப்பினும், மாலை வரையில் ராம்குமாரின் உடலைப் பெறுவதற்கு ராம்குமாரின் பெற்றோர், உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை.
அவர்கள் வந்து அடையாளம் காட்டிய பின்னர்தான் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று வழக்குரைஞர் ராம்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், பிரேதப் பரிசோதனை நடத்தலாம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு மாலை 5.40 மணியளவில்தான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
விதிகளின்படி மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை நடைபெறாது என்பதால், இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
இறந்தவரின் உடலை யாராவது 5 பேர் அடையாளம் காட்டினால் போதுமானது. உறவினர்கள்தான் வர வேண்டும் என்பதில்லை' என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு கூறினார்.
கடைகள் அடைப்பு: ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறை அமைந்துள்ள பகுதியில் உள்ள 3 பாதைகளையும் அடைத்து, பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டனர்.
உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, மருத்துவமனை பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை.
போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல்: இந்த நிலையில், ராம்குமாரின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி, மல்லர் பேரவை உள்ளிட்ட கட்சியினர் அவ்வப்போது திரண்டு மருத்துவமனை அருகில் கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் தொடர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும், நெரிசலைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டனர்.
கூடுதலாக ஒரு மருத்துவர்: உயர்நீதிமன்றம்ராம்குமாரின் உடலை பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவில் மேலும் ஒரு மருத்துவரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அவரது தந்தை ஆர்.பரமசிவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தாக்கல் செய்த அவசர மனுவில் கூறியிருப்பதாவது:-
சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை காவல் துறை கண்டுபிடிக்கவில்லை. தொடக்கம் முதலே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ராம்குமாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக வருமாறு சிறை கண்காணிப்பாளர் கூறினார்.
ஆனால், சிறிது நேரத்தில் ஊடகங்களில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. கடைசியாக சந்தித்தபோது, அவர் நன்றாக பேசினார்.
நல்ல மனநிலையிலேயே இருந்துள்ளார். தற்கொலை செய்யும் எண்ணத்தில் இல்லை. இது தற்கொலை அல்ல. காவல் துறையினரின் உதவியுடன் சிறைத் துறையினர் ராம்குமாரை கொலை செய்துள்ளனர்.
எனவே, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, நாங்கள் கூறும் மருத்துவர்களும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்.
பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த உத்தரவு:-பிரேத பரிசோதனை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடய அறிவியல் துறை பேராசிரியர் எஸ்.செல்வகுமார், தடய அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் மணிகண்ட ராஜா, கே.வி.வினோத் ஆகியோருடன் கூடுதலாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை தடய அறிவியல் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நியமிக்கப்படுகிறார்.
இந்த மருத்துவக் குழு மீது நம்பிக்கை இல்லை என்பதை தகுந்த காரணங்களோடு நிரூபித்தால் மட்டுமே மனுதாரர் தெரிவிக்கும் மருத்துவரை நியமிக்க கோரலாம்.
இவர்கள் தங்கள் பணியை சுதந்திரமாக, வெளிப்படையான முறையில் மேற்கொள்வார்கள் என்று நீதிமன்றம் கருதுகிறது.
பிரேத பரிசோதனையை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றார்.
- Dina Mani
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.