ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கடுமையான அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,
அரசாங்கம் கவிழாது எனவும் கவிழும் எனக் கூறும் தரப்பினரின் கட்சியே பிளவடையும் எனவும் ஜனாதிபதி தற்போது கூறி வருகின்றார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின் இறுதி நாட்களிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி இவ்வாறு கூறி வந்தார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
அரச அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் போட்டி நிலைமை உருவாகியுள்ளது என்பது இரகசியமன்று.
கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு தற்போது இருவருக்கும் இடையில் அதிகளவில் போட்டி ஏற்பட்டுள்ளது.
இது எதற்காக என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு புறத்தில் செலுத்த முடியாத அளவிற்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளதுடன் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
நாடு முழுவதிலும் வீதிகள் மறிக்கப்பட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கி ஆட்சி நடத்த முயற்சிக்கின்றது என வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்
0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்