முஸ்லிம் தனியார் சட்டத்தை உருவாக்கவும் - பஷீர் சேகுதாவூத்

-யூ.எல். மப்றூக் 
சமகாலச் சூழலை எதிர்கொள்ளும் வகையில், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான மாற்றங்களை, குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமில்லாத வகையில் மேற்கொள்ள வேண்டும் என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், கோரிக்கை விடுத்துள்ளார். 
“இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் போன்றோர், அத்தியாவசியமான சமூகவிடயங்களில் மக்களுடன் கலந்துரையாடாமல் நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பது, பெரும் ஆபத்தை விளைவிக்கவல்லது. முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தில், திருத்தங்கள் வேண்டுமென்று மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் சட்டவல்லுநர்கள், புத்திஜீவிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும்,  அது தொடர்பில் பேசி முடிவெடுக்கப்படாமையினாலேயே, தற்போது இவ்விவகாரம் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது” அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில், அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
“நீதியமைச்சர்  விஜேயதாஸ ராஜபக்ஷவினால், அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தில் முன்வைத்த யோசனையில் ‘முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயதெல்லை, மற்றும் அச்சட்டத்தின் கீழ்காணப்படும் வேறுகாரணங்கள் தொடர்பான சட்டவிதப்புரைகள், இலங்கை அங்கம்பெறும் சில சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியம ஒழுங்குகளுடன் ஒத்திசையாத காரணத்தினால், அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவை ஏற்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 
முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்வதென்பது, முஸ்லிம் சமூகத்தின் கைகளில் இருந்து நழுவியது மட்டுமல்லாமல், உள்நாட்டு விவகாரம் என்பதையும் தாண்டி, சர்வதேசத் தலையீடு ஏற்பட்டுள்ள விவகாரமாக மாறியுள்ளது. இவ்வாறுதான் இலங்கையின் இனப்பிரச்சினையும். நாம் நமது பிரச்சினையை நமக்குள் தீர்த்துக்கொள்ளத் தவறியமைதான், சர்வதேச தலையீடுகளுக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழுத்தங்களுக்கும் நாடு உட்படுவதற்கு காரணமாக அமைந்தது. 
முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவராவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நாட்டுக்குக் கிடைக்காது என்பதைக் குறித்துக்காட்டுகிறது. நாட்டுக்குக் கிடைக்கும் பாரிய பொருளாதார நன்மை ஒன்றை தடுக்கும் சமூகமாக, இலங்கை முஸ்லிம்களைக் காட்ட, முஸ்லிம் விரோத சக்திகளுக்கு ஒருவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
இஸ்லாமிய மார்க்கஅறிஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் போன்றோர், அத்தியாவசியமான சமூக விடயங்களில் மக்களுடன் கலந்துரையாடாமல், நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பது, பெரும் ஆபத்தை விளைவிக்கவல்லது. 
எனவே, இக்கட்டான இக்காலத்தில், எல்லா வேறுபாடுகளையும் மறந்து, முஸ்லிம் மார்க்க, அரசியல், குடிமைச் சமூகத் தலைமைகள் அனைத்தும் ஒன்றுபட்டு, அவசரமாகக் கலந்துரையாடல்களைச் செய்து, சமகாலச் சூழலை எதிர்கொள்ளும் வகையில், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான மாற்றங்களை குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமில்லாத வகையில் மேற்கொள்ள வேண்டும் என பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறேன்” என, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.