இனவாத குழுக்கள் திடீரென SWITCH OFF - மர்மம் என்ன?

முஸ்லிம்களுக்கு எதிராக ஓரிரு நாட்களாக அச்சத்தைக் கிளப்பியிருந்த பேரினவாதம் பலூனில் இருந்து காற்று திடீரென வெளியேறியதுபோல் திடீரென நின்றுவிட்டது போன்ற ஒரு நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது.பொது பல சேனா உள்ளிட்ட பல பேரினவாத அமைப்புகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்தே இந்தத் திடீர் மாற்றம். இச்சந்திப்பை அடுத்துக் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் இனி இனவாதத்தைக் கையில் எடுக்கப் போவதில்லை என்றும் இனவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்றும் அதிசயிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். நேற்று வரை இனவாதத்தில் ஈடுபட்டிருந்த-நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடப் போவதாகக் கூறி வந்த ஞானசார மறு நாளே மேற்படி நிலைப்பாட்டை எடுப்பதற்கு காரணம் என்ன?ஒரு நாளிலேயே அவர் எப்படி உண்மையை விளங்கிக்கொண்டார் என்ற கேள்விகள் எழுகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பௌத்த அமைப்புகள் முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பச்சைக் கொடி காட்டியதைத் தொடர்ந்தே ஞானசார மேற்படி நிலைப்பாட்டை எடுத்தார் என்பதுதான் உண்மை.
மஹிந்தவின் தேவைக்காக-மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இனவாதத்தில் ஈடுபட்டு வந்த ஞானசார ஐக்கிய தேசிய கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
புலிகளை அழித்ததுபோல்…
=========================
தனது எதிரிகளை சத்தமின்றி-இரத்தமின்றி அழிப்பதில் வல்லவர் ரணில் விக்ரமசிங்க.அவரின் அந்த திறமைக்கு சிறந்த உதாரணம்தான் புலிகளுக்கு எதிரான அவரது நடவடிக்கை.யுத்த நிறுத்தம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து அதனூடாக புலிகளிடையே பிளவை ஏற்படுத்தி-அவர்களை பலவீனப்படுத்தி புலிகளின் கட்டமைப்பை சிதைத்தனாலேயே மஹிந்தவால் புலிகளை இலகுவில் தோற்கடிக்க முடிந்தது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த-புலிகளை அடியோடு அழித்த பெருமையை மஹிந்த தட்டிச் சென்றாலும் அதற்கான அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்தவர் ரணில்தான் என்பதை முழு உலகமும் அறியும்.
மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மஹிந்த கைகளை பயன்படுத்தி எதிரிகளை அழிக்க முற்படுவார்.ஆனால்,ரணில் மூளையைப் பயன்படுத்தி எதிரிகளை அழிப்பதற்கு முற்படுவார்.மஹிந்த செய்வது வெளிப்படையாகத் தெரியும்.ஆனால்,ரனில் செய்வது அப்படித் தெரியாது.தெரிந்தாலும் அது வேறு ஒன்றைப்போல் தோற்றம் கொடுக்கும்.இதுதான் அவரது இராஜதந்திரம்.
பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தொடர்பிலான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமைக்கும் ரணிலின் அந்த இராஜதந்திரத்துக்கும் இடையில் தொடர்பிருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.
விஜயதாஸ ராஜபக்ஸ நாடாளுமன்றில் ஆற்றிய முஸ்லிம்களுக்கு எதிரான அந்தப் பாரதூரமான உரையை நாம் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.இலங்கையில் உள்ள 32பேர் ஐ .எஸ் அமைப்பில் இணைவு,வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் உலமாக்கள் அடிப்படைவாதத்தைப் போதிக்கின்றனர்,அதேபோல்,மார்க்க அமைப்புகளும் அடிப்படைவாதத்தைப் போதிக்கின்றன என்ற விஜயதாஸவின் அந்த ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொது பல சேனாவின் நிலைப்பாடாகும்.
பொது பல சேனா ஆரம்பம் தொட்டு இது தொடர்பில் கூறி வருகின்றது.விஜயதாஸ சுட்டிக் காட்டிய அதே மார்க்க அமைப்புகளைத்தான் பொது பல சேனாவும் தீவிரவாத அமைப்புகள் என்று கூறி வருகின்றது.விஜயதாஸ கூறிய அதே மத்ரசாக்களைத்தான் பயங்கரவாதத்தைப் போதிக்கும் இடங்களாக பொது பல சேனா கூறி வருகின்றது.
மொத்தத்தில் ஞானசாரவும் விஜயதாஸயும் ஒரேநிலைப்பாட்டில்தான் உள்ளனர்.விஜயதாஸவுடனான கூட்டத்தில் இந்த விடயங்கள் ஞானசாரவால் சுட்டிக்காட்டப்பட்டபோது அது தொடர்பில் பொது பல சேனா எதிர்பார்க்கும் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வாக்குறுதி வழங்கினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே,புலிகளை ஒழிப்பதற்கு ரணில் சத்தமின்றி நடவடிக்கை எடுத்ததுபோல் இந்த மார்க்க அமைப்புகள் மீதும்-மதரஸாக்கள் மீதும்-இலங்கை வருகின்ற வெளிநாட்டு உலமாக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி சத்தமின்றி நடவடிக்கை எடுப்பதால்தான்-அந்த ரகசிய திட்டத்தை ஞானசாரவிடம் கூறியதால்தான் அவர் அவரது நிலைப்பாட்டை மாற்றுவதாக அறிவித்தாரா என்ற நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.
முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
========================================
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் ஏதோவொரு வழியில் நிறுத்தப்படுவது மகிழ்ச்சியான விடயம்தான்.அந்த வகையில்,ஞானசாரவின் அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியடையலாம்.ஆனால்,இனிமேல்தான் முஸ்லிம்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக செயற்பட்ட-முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தொழிக்க விரும்பிய ஞானசார விஜயதாஸவின் ஒரேயொரு சந்திப்பை அடுத்து தலைகீழாக மாறுகிறார் என்றால்-அவரது பழைய நிலைப்பாட்டை முழுமையாகக் கைவிடுகிறார் என்றால் நாம் கொஞ்சம் சிந்தித்தே ஆக வேண்டும்.
விஜயதாஸவின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உரை,அந்த உரையாகவே இருக்கின்ற ஞானசாராவின் நிலைப்பாடு மற்றும் தனக்கு விரும்பாதவர்களை அழிப்பதற்கு ரணில் பயன்படுத்தும் ஆயுதம் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் முஸ்லிம்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.உறுதியான வாக்குறுதி ஒன்று வழங்கப்படவில்லையென்றால் ஞானசார அவரது நிலைப்பாட்டை மாற்றி இருக்கமாட்டார் என்ற உண்மையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த அரசை உருவாக்குவதற்காக முஸ்லிம்களின் 90 வீத வாக்குகள் அளிக்கப்பட்டன என்பதற்காக இந்த அரசு முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்படும் என்று நாம் நினைக்கக்கூடாது.சூழிநிலைக்கு ஏற்ப-அரசின் இருப்புக்கு ஏற்பவே எந்த அரசும் காய் நகர்த்தும்.நன்றி-விசுவாசம் என்பதெல்லாம் அரசியல் கிடையாது.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டினால்தான் ஆட்சியைத் தக்கவைக்க,முடியும் என்ற நிலை தோன்றினால் அதையும் செய்வதற்கு ஆட்சியாளர்கள் தயங்கமாட்டார்கள்.அரசியலில் இதெல்லாம் சகஜம்.
-M.I.முபாறக், முஸ்லிம் முரசு பத்திரிகை மற்றும் செரெண்டிப் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசியர்

Post a Comment

  1. Ondrupattaal undu vaalvu naanga yen pirinthu seyalpadavendum enga aramba kala pirachchinai ellam ore thalamaiyin keel theerthathupol sariyaga our sariyaga thalaimaththuvaththai therndedupom

    ReplyDelete

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.