இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனவரி 20-ல் பதவியேற்புஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 8-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் டிம் கெய்னும், குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸýம் களத்தில் உள்ளனர்.
வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குப் பெட்டிகள், வாக்குப் பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். புதன்கிழமையன்று (நவம்பர் 9) அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பது தெரிந்து விடும். இழுபறி நிலை நீடித்தால் முடிவு தெரிய கூடுதலாக சிலமணி நேரங்கள் ஆகும்.
ஜனவரி 20-ல் பதவியேற்பு
தேர்தலில் வெற்றி பெற்றது யார்? என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும் என்ற போதிலும், டிசம்பர் 19-ஆம் தேதிதான் தேர்வாளர் குழுவின் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அடுத்த அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படுவார். 2017-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி புதிய அதிபர் பதவியேற்று வெள்ளை மாளிகைக்குச் செல்வார். அப்போது நாட்டு மக்களுக்கு புதிய அதிபர் முதல் உரையாற்றுவார். அதுவரை இப்போதைய அதிபர் ஒபாமா பதவியில் இருப்பார். அமெரிக்க அதிபர் தேர்தலுடன் சேர்த்து 435 பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள்; 34 செனட் அவை உறுப்பினர்கள்; 12 மாகாண ஆளுநர்களைத் தேர்வு செய்யவும் அமெரிக்க மக்கள் வாக்களிக்க உள்ளனர். வெளியுறவு அமைச்சராக ஹிலாரி பதவி வகித்தபோது, தனியார் இ-மெயில் சர்வரை அலுவலகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இருந்து அவரை எஃப்பிஐ திங்கள்கிழமை விடுவித்தது. இது ஜனநாயகக் கட்சிக்கு கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக் கணிப்பில் ஹிலாரி முன்னிலை

ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற 65.5 சதவீதம் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் முன்னணி கருத்துக் கணிப்பு இணையதளமான "ஃபைவ்தேர்டிஎய்ட்' தெரிவித்துள்ளது. இது ஜனநாயகக் கட்சியினரிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. ஹிலாரிக்கும், டிரம்புக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தபோதிலும், கடந்த ஒரு சில தினங்களில் ஹிலாரியின் கைஓங்கிவிட்டது என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் வாக்குகளைத் தவிர, அதிபர் யார் என்பதை முடிவு செய்வதில் தேர்வாளர் குழு வாக்குகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் 291.8 வாக்குகள் ஹிலாரிக்கும், 245.3 டிரம்புக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற 270 தேர்வாளர் குழு வாக்குகள் தேவை.
மக்கள் அளிக்கும் வாக்குகளில் 48.3 சதவீதத்தை ஹிலாரியும், 45.4 சதவீதத்தை டிரம்பும் பெறுவார்கள் என்றும் கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
யார் வென்றாலும் சாதனை!

இந்தத் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் மிக அதிக வயதில் (70) அமெரிக்க அதிபரானவர் என்ற சாதனையைப் படைப்பார். இதற்கு முன்பு ரொனால்ட் ரீகன் அதிக வயதில் (69) அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.