தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை இனவாதத்துடன் முடிச்சுப் போடுவது ஏன்? - பளீல் நளீமிக்கு பதில்


S.H.M பளீல் நளீமிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில்


GSP+ வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒரு உப குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இதனைக் கண்டித்து கடந்த 03.11.2016 – வியாழக் கிழமையன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாரிய ஆர்பாட்டமொன்று கொழும்பில் நடத்தப்பட்டது.


ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் தற்போது பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருவதை நாம் அவதானிக்க முடிகிறது.

அதிலும் குறிப்பாக நேற்றைய விடிவெள்ளி மற்றும் நவமணி ஆகிய பத்திரிக்கைகள் அஷ்ஷெய்க் பளீல் நளீமி எழுதிய “ஆர்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்” என்ற தலைப்பிலான ஆக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளை பற்றி விமர்சனமாக குறித்த ஆக்கம் எழுதப்பட்டிருந்ததே தவிர முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய எவ்வித ஆழமான கருத்துக்களும் அதில் அடங்கப்பட வில்லை. குறித்த ஆக்கம் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பதிலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

உள்நாட்டு பிரச்சினைக்கு வெளிநாட்டு பத்வாவை எதிர்பார்ப்பவர்கள் நாங்கள் அல்ல

அஷ்ஷெய்க் பளீல் நளீமி அவர்களின் குறித்த கட்டுரையில் உள்நாட்டு பிரச்சினைக்கு வெளிநாட்டுத் தீர்வை பெற்றுக் கொள்வதைப் போல் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
“ரஷ்யாவில் மழை பெய்யும் போது கம்பியூனிஸ்ட்டுக்கள் இலங்கையில் குடை பிடிப்பார்கள்” என்றொரு கருத்துண்டாம். அது போல் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டமும் அமைந்தது என்று வாதிட வருகிறார் அஷ்ஷெய்க் பளீல் நளீமி அவர்கள்.

உண்மையில் இந்த புது மொழி யாருக்கு பொருந்தும் என்பதை கட்டுரையாளர் கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொள்ள வேண்டும்.


எகிப்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இலங்கையில் தீர்வு தேடுபவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்ல. அல்லது ஆயுதத்துடன் வரும் இஸ்ரேல் படைக்கு கல்லால் அடித்து உயிர் துறங்கள் என்று பத்வா வழங்குபவர்களும் நாங்கள் அல்ல.

வெளிநாட்டில் நடக்கும் காரியங்களை இங்கு காசாக்க முனைபவர்களும் தவ்ஹீத் வாதிகள் அல்ல. மாறாக இலங்கை பிரச்சினைகளுக்கு வீதியில் இறங்கி போராடுவதே தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரிய பணியாகும். காலத்துக்கு தேவையான பணிகளை மிக கச்சிதமாக முன்னெடுத்து செயல்படுவதும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய முறையில் வழி காட்டுவதுமே தவ்ஹீத் ஜமாஅத் இது வரை காலம் செய்து வருகிறது.
குறித்த ஆர்பாட்டத்தில் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவர்களை மரியாதைக் குறைவாக பேசியதாகவும் அதுதான் தற்போது பிரச்சினையென்றும் கட்டுரையின் சாராம்சம் அமையப் பெற்றிருக்கிறது.
பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் என்பவர் கடந்த காலங்களில் எந்த விதங்களில் நடந்து கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அவர் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்தும் பல விதமாக கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார். முஸ்லிம்களை பற்றி பேசி வரும் கருத்துக்களை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளா விட்டாலும் படைத்த இறைவனைப் பற்றி பேசும் வார்த்தைகளை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்கும் படி இஸ்லாம் நமக்கு வலியுறுத்த வில்லை.


அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். "நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11:38

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் நமக்கு சொல்வது என்ன? என்பதை அஷ்ஷெய்க் பளீல் அவர்கள் தெரிந்து தான் இருக்கிறாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாரா?

நூஹ் (அலை) அவர்கள் கப்பலை கட்டுகிற நேரத்தில் அதனை கின்டல் செய்தவர்களை கேலி செய்தவர்களை நோக்கி சொன்ன பதிலை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு எடுத்துக் காட்டுகிறான். அல்லாஹ்வின் பணியை கேலி செய்தவர்களுக்கே உங்களைப் போன்று நாங்களும் நடப்போம் என்று நூஹ் (அலை) அவர்கள் கூறும் போது, அல்லாஹ்வையே ஒருவன் தொடந்து கேலி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு மரியாதைக்கு மேல் மரியாதை கொடுப்பதற்கு எந்த குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டப் போகிறீர்கள்?
முஸ்லிம்களை திட்டுவதையோ, ஏசுவதையோ, பொருத்துப் போகலாம். என்று வைத்துக் கொள்வோம் தொடர்ந்தும் அல்லாஹ்வை கேவலப்படுத்துவதை ஏன் பொருத்துப் போக வேண்டும்?

நாம் என்ன அவருக்கு எதிராக அவரை தாக்கினோமா?, அடித்தோமா, அடிக்கும் படி தூண்டினோமா? அவருக்குறிய பதில் அளிக்கப்பட்டது அவ்வளவு தான்.

கொடுக்கப்பட்ட பதில்களை கடினமாக வார்த்தைகள் சுட்டிக் காட்டப்பட்டால் அதனை திருத்திக் கொண்டு அடுத்த கட்டம் பயனிப்பதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் அவருக்கு பதில் கொடுப்பதே தவறு என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மார்க்கம் அதற்கு என்ன அனுமதியை தந்திருக்கிறது.

GSP+ சலுகை்ககாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் கொண்டுவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் நடத்தும் போது, முஸ்லிம் தனியார் சட்டத்தை கிண்டல் செய்தது மாத்திரமன்றி உங்கள் அல்லாஹ்வுக்கு இரண்டு மனைவிகளா? மூன்று மனைவிகளா? என்றெல்லாம் கேலி செய்த ஒருவரை விமர்சிக்கும் போது,
நாம் பயப்படும் சமுதாயம் என்று அவர் நினைக்கிறாரா? நாய் சப்தமிடுவதைப் போல் சப்தமிடுகிறார். எமது உரிமையை தடுக்க ஞானசாரவாலும் முடியாது. நோனசாரவாலும் முடியாது. சாராயம் குடிக்கும் இவர்கள் எப்படி எமது உரிமை பற்றி பேச முடியும்? அவரின் சமுதாயமே அவரை மதிப்பதில்லை.

நாங்கள் தேரர்களை மதிக்கிறோம். பௌத்த மதத் தலைவர்களை மதிக்கிறோம். ஆனால் எங்கள் அல்லாஹ்வை கேவலப் படுத்தும் இவரை (ஞானசாரவை) நாங்கள் மதிக்க மாட்டோம் என்பதே எங்கள் நிலைபாடாகும்.
சிங்கள மக்களின் உரிமைகளுக்காக நாங்களும் குரல் கொடுப்போம். ஆனால் இந்த ஞானசாரவை சிங்கள மக்களும் மதிக்க மாட்டார்கள். என்று தான் ஆர்பாட்டத்தில் பேசப்பட்டது.

இப்படி பேசுயது தான் மிகப் பெரும் தவறாக போனது என்று கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

இஸ்லாத்திற்கு எதிராக எவர் பேசினாலும் அவர்களை எதிர்த்து நாம் குரல் கொடுத்தால் அதனை தவறு கானும் இவர்கள் அமெரிக்காவிலோ அல்லது வெளிநாடுகளிலோ மாத்திரம் இஸ்லாத்திற்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால் அதற்கு எதிராக முந்திக் கொண்டு பதிலளிக்க முனைவது ஏன்?
வெளிநாட்டில் இஸ்லாத்தையோ, அல்லாஹ்வையோ யாராவது கேவலப்படுத்தினால் துள்ளிக் குதிக்கும் நாம் உள்நாட்டில் ஒருவன் அல்லாஹ்வை கேவலப்படுத்தும் போது மாத்திரம் ஏன் அமைதியாகிறோம்? இதுதான் இஸ்லாமா?

உள்நாட்டில் அல்லாஹ்வை எவனாவது திட்டினால் பொறுமை பத்வாவும், வெளிநாட்டில் யாராவது அல்லாஹ்வை திட்டினால் திருப்பியடிக்கும் பத்வாவும் எங்கிருந்து பெற்றீர்கள்?

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கும் பேசத் தெரியாது என்று சொல்வார்களா?
தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி சொல்லும் இதே உபதேசத்தை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை நோக்கியும் பளீல் நளீமி அவர்கள் சொல்வார்களா?

அப்போது உர்வா, "முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக (எதிரிகள்) அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்... குறைஷிகள் வென்று விட்டாலும்...(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கின்றேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்றேன்'' என்று கூறினார்.


(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கி (நீ வணங்கும் சிலையான) லாத்தின் மர்ம உறுப்பை சுவைத்துப் பார் என ஏசிவிட்டு, "நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா?'' என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, "இவர் யார்?'' என்று கேட்டார். மக்கள் "அபூபக்ர்'' என்று பதிலüத்தார்கள். அதற்கு உர்வா, "நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லா விட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்'' என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார்.

புகாரி : 2731
மேற்கண்ட செய்தியில் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் என்ன வார்த்தை பேசினார்கள்? அது போல் தான் ஆர்பாட்டத்தில் பேசப்பட்டதா? அல்லது அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கும் பேசத் தெரியாது, நிதானம் இல்லை, சமுதாய அக்கரையில்லை என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?
ஆர்பாட்டம் தான் எதிர் விளைவை உண்டாக்கியதா?

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தினால் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டதாகவும் அதற்கு இவர்கள் பொருப்பெடுப்பார்களா? என்றும் அஷ்ஷெய்க் பளீல் நளிமி தனது கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது சிங்கள நாடு இந்த இடத்திற்கு சக்கிலித் தம்பியோ வரவில்லை. தேவையான ஆயுதங்களை கொண்டு வந்திருக்கிறோம். தம்பிலா வந்திருந்தால் தற்கொலை தாக்குல் நடத்துவோம். என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை தடுக்க வந்தவர்கள் சொல்லிய செய்தியை மேற்கோள் காட்டி தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் ஏற்படுத்திய விளைவு இது என்கிறார் கட்டுரையாளர்.

மொட்டை தலைக்கும் முட்டுக் காலுக்கும் முடிச்சுப் போடும் வேலையை இவர் செய்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
குறித்த இனவாதிகள் பேசியது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தின் பின்னரா? அல்லது ஆர்பாட்டத்திற்கு முன்னரா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தின் பின்னர் குறித்த இனவாதிகள் இப்படி பேசியிருந்தால் பளீல் நளீமியின் வாதப்படி ஆர்பாட்டத்தில் சிங்கள மொழியில் பேசிய உரை ஏற்படுத்திய விளைவு என்று சொல்லலாம். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் நடக்கும் போது தான் குறித்த நபர் கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக குறித்த பேச்சை பேசுகிறார்.

இப்படியிருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரையினால் தான் இந்த விளைவு என்று எப்படி இவர் எழுத முடியும்?

முஸ்லிம்களின் உரிமைக்கான போராட்டம் அறிவிக்கப்படுகிறது. குறித்த போராட்டம் நடத்தப்பட்டால் கொலை செய்வோம் என்கிறார்கள். அதற்காக உரிமையை விட்டுக் கொடுத்து ஊமையான சமுதாயமாக வாழும் படி இஸ்லாம் சொல்கிறதா? அல்லது உரிமைக்காக போராடும் படி சொல்கிறதா?
தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டத்தில் பேசிய பேச்சுத் தான் இனவாதத்தை தூண்டியது என்று சொல்ல வந்தவர் அதற்கு ஆதாரமாக ஆர்பாட்டத்திற்கு முன்னர் இனவாதிகள் பேசியதை ஆதாரம் காட்டுவது ஏன்?

அப்படியானால் GSP+ சலுகையை காரணம் காட்டி முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் நடத்தியதே தவறு என்று சொல்ல வருகிறாரா கட்டுரையாளர்?
விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது விமர்சனமாக்குவது இஸ்லாமிய அறிஞர்களுக்கு அழகான பண்பாக நாம் காணவில்லை.
தெளியாகொன்னையில் பள்ளிவாயல் தாக்கப்பட்டிருப்பதாகவும், குறித்த தாக்குதல் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தான் நடந்தது என்றும் ஆகவே இதுபோன்று பள்ளிகள் தாக்கப்படும் போது கொழும்பு ஆர்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தருவார்களா? என்றும் கட்டுரையாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை வரலாற்றில் இதுதான் முதலாவதாக நடத்திய ஆர்பாட்டமா? இதற்கு முன்பு நாம் எந்த ஆர்பாட்டத்தையும் நடத்தவே இல்லையா?

தெளியாகொன்னை பள்ளித் தாக்குதலுக்கு கொழும்பு ஆர்பாட்டக் காரர்கள் பாதுகாப்புத் தருவார்களா? என்று கேட்கும் இவர் தேசிய ஷுரா சபையின் அங்கத்தவராக இருந்து கொண்டு இந்தக் கேள்வியை கேட்பதை அறிவுடையோர் ஏற்றுக் கொள்வார்களா? இதே பாணியில் நாம் திருப்பிக் கேட்டால் அதற்கு என்ன பதில் தருவார்கள்?
இலங்கை வரலாற்றில் பள்ளிகள் தாக்கப்படவே இல்லையா? அல்லது தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு முன் ஆர்பாட்டம் நடத்தவே இல்லையா?
தெளியாகொன்னை பள்ளிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பாதுகாப்பு வழங்குமா? என்று கேட்கிறார் கட்டுரையாசிரியர்.

இந்த ஆட்சி பொறுப்பெடுத்த பின் கல்ஹின்னை பள்ளி தாக்கப்பட்டதே? இதற்கு யார் பாதுகாப்பு வழங்குவார்கள்? கட்டுரையாளர் சார்ந்திருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமியா? அல்லது ஜம்மிய்யதுல் உலமா சபையா? அல்லது சூரா சபையா?

மும்மன்ன பாடசாலை மைதானம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதே இதற்கு யார் பொறுப்பெடுப்பார்கள்? ஜம்மிய்யதுல் உலமா சபையா? அல்லது சூரா சபையா?
பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்கப்பட்டதே இதற்கு யார் பொறுப்பெடுப்பார்கள்? ஜம்மிய்யதுல் உலமா சபையா? அல்லது சூரா சபையா?
ஹலால் பிரச்சினையை காரணம் காட்டி நாட்டின் பல பள்ளிகள் தாக்கப்பட்டதே அதற்கெல்லாம் ஜம்மிய்யதுல் உலமா சபை தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்று சொன்னால் அது அறிவுடைமையாகுமா?
சமுதாயத்திற்கான ஒரு பணியை செய்யும் போது அதனை பிடிக்காத மாற்று சமுதாயத்தவர்கள் அதனை எதிர்ப்பதினால் அந்தப் பணியின் பின்னால் இயற்கையாக நடைபெறும் காரியங்களுக்கும் பணியை செய்தவர்கள் தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்பது அறிவுடமையல்ல, அப்படி செய்வதானால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஏற்படும் பொறுப்புகளை விட அதிகமாகவே மற்ற அமைப்புகளுக்கு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மத உணர்வுகள் மதிக்கப்பட வில்லையா?

மத உணர்வுகளை மதிக்காமலும், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் விதமாகவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாகவும் கட்டுரையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமான பல்வேறு பட்ட நிகழ்ச்சிகளையும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகும். குறிப்பாக இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கும் விதத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் நாடு முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் அதன் மூலம் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் களையப்படுவதும் தொடர்ந்தும் நடைபெற்று வரும் ஒன்றாகும்.

இவைகள் பற்றிய எவ்வித தெளிவும் இல்லாமல் விமர்சன நோக்கத்துடன் மாத்திரம் குறித்த கட்டுரையை எழுதியிருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் காத்திரமான முடிவுகள்

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க கருத்து பரிமாற்றத்தை தோற்றுவிப்பதற்கு முன்பாக இதனை பற்றி பேசியவர்கள் யார்? முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று அனைவரும் பேசியிருக்கிறோம். GSP+ சலுகைக்காக தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது யார்? இன்று வரை அதே முடிவை கொண்டு செல்வது யார்?

GSP+ என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவர்களுக்கெல்லாம் அதனைப் பற்றிய தெளிவூட்டல்களையும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் முக்கியத்துவத்தையும் பொது மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர்கள்.

அறிக்கை விடுவதினால் மாத்திரம் காரியம் சாதித்து விடலாம் என்பது சமயோசிதம் அல்ல. அறிக்கைகள் செய்திகளை சொல்லுமே தவிர அலுத்தத்தை உண்டாக்காது. ஆர்பாட்டங்கள் தான் அலுத்தத்தை உண்டாக்கும். ஆகவே தான் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டத்தை நடத்தியது.

இந்த சாதாரண உண்மையையும் இங்கு சொல்லி வைக்க ஆசைப்படுகிறோம்.
கொழும்பு ஆர்பாட்டத்துடன் நாம் நின்று விட வில்லை. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பிலும் திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் தொடர்பிலும் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்கள் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இது பற்றிய தெளிவூட்டல்களை வழங்கும் நூல்கள் போன்றவற்றையும் ஜமாஅத் வெளியிடவிருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குவதுடன் புத்தி ஜீவிகளுடனான பரந்து பட்ட சந்திப்புக்களிலும் ஜமாஅத் ஈடுபடவுள்ளது.

அன்பான வேண்டுகோள்!

GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டத்தின் கருப்பொருளை திசை திருப்பும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய உரிமைகளை மறக்கடித்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.


எந்த ஒருவரும், எந்தக் காரணத்திற்காகவும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கக் கூடாது. அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்களை முஸ்லிம் சமுதாயத் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமே தவிர அரசோ, ஐரோப்பிய ஒன்றியமோ அதில் தலையிடக் கூடாது. இந்த முக்கிய கருப்பொருளை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தை விமர்சனம் என்ற பெயரில் நாம் திசை திருப்பி விட்டால் கிடைக்கும் விடிவையும் இழுத்து மூடியவர்களாக மாறி விடுவோம் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறோம்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.