தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் கைது விவகாரம் - ஹக்கீமுக்கு பதிலளித்த பஷீர் சேகுதாவுத்

GSP+ சலுகையை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து கடந்த 03.11.2016 அன்று கொழும்பிலும், 11.11.2016 அன்று கிழக்கு மாகாணம் சம்மாந்துறை நகரிலும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்தின் பின்னர் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் சூடு பிடித்துள்ள அதே வேலை. குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம்களை அடித்து விரட்டுவோம் என ஆர்பாட்டத்திற்கு முதல் நாள் பேசிய பொது பல சேனாவின் செயலாளர் ஞானசாரவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலிலும் வைக்கப்பட்டிருக்கிறார்.

பினை நிபந்தனையை மீறினார் என்கிற குற்றச்சாட்டில் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் குறித்த ஆர்பாட்டம் தொடர்பிலும், தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள், செயலாளர் கைது போன்றவற்றை பற்றி கருத்து வெளியிட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும், தவ்ஹீத் ஜமாஅத் அடிப்படை வாதத்தை போதிக்கிறது பொது பல சேனாவையும், தவ்ஹீத் ஜமாஅத்தையும் இயக்கும் எஜமானர் ஒருவர் தான் என்றெல்லாம் பேசி வருகிறார்.

இந்நிலையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், முன்னால் அமைச்சருமான பஷீர் சேகுதாவுத் “அஷ்ரபின் புதிய முகம் ராசிக்” என்று சிலாகித்துள்ளமையானது ஹக்கீமின் கருத்துக்கு அவருடைய கட்சியின் தவிசாளரே காயடித்துள்ளமையை வெளிக்காட்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்து வரும் அதே நிலையில் சமுதாயப் பணிகளிலும் பாரிய அளவில் முன்னெடுப்புகளை செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இரத்த தானத்தில் இலங்கை மட்டத்தில் கடந்த 03 ஆண்டுகள் முதலிடம் பெற்றிருப்பதுடன், அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு நேரத்தில் வெள்ளம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி நாட்கள் வரை தனது ஆயிரக் கணக்கான தொண்டர்களை வைத்து தொண்டுப் பணி செய்ததுடன் சுமார் இரண்டரை கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது என்பது நாடறிந்த செய்தியாகும்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கருத்து என்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின் கருத்தல்ல என்பதுடன், முன்னால் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் இந்நாள் தவிசாலருமான பஷீர் சேகுதாவுத் போன்ற அவருடைய கட்சி முக்கியஸ்தர்களே ஹகீமின் கருத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் பாசரையில் வளர்ந்த பஷீர் சேகு தாவுத் போன்ற மு.கா போராளிகளே தற்போது ஹகீமுக்கு மறுப்புக் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. 

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொழும்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்ட அதே வேலை மு.கா வின் கோட்டையான கிழக்கில் அதுவும் சம்மாந்துறை மண்ணில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டத்தில் அமைச்சர் ஹக்கீமின் கல்லீரல் கறைய ஆரம்பித்திருக்கிறது என்பதை பொது மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள்.

தனது அரசியல் இருப்புக்கு மாற்றாக மக்களுக்கு யார் நல்லது செய்ய முன்வந்தாலும் அவர்களை ஓரம் கட்டும் வங்குரோத்து அரசியல் மாத்திரமே தனது பலம் என்று நம்பிக் கொண்டிருக்கும் மு.கா தலைவருக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் கலக்கத்தை உண்டாக்கியதில் ஆச்சரியமில்லை.

அதிலும், எவ்வித அரசியல் முன்னெடுப்பும் இல்லாத, அரசியலுக்குள் நுழையாத தனித்துவமாக இருந்து முஸ்லிம்களுக்காக முஸ்லிம் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி ஹக்கீம் வயிற்றில் புளியை காய்ச்சியமை தான் அவரின் தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்புக் கோஷத்திற்கு வழி செய்துள்ளது.

இதே நேரம் தவ்ஹீத் ஜமாஅத்தின் தைரியமான முன்னெடுப்பு மற்றும் பொது பல சேனா என்கிற அரசியல் கட்சிக்கு எதிரான அவர்களின் இஸ்லாமிய வெருப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிரான குர்ஆன் சுன்னா அடிப்படையிலான தவ்ஹீத் ஜமாஅத்தின் பதிலுரைகள், நேருக்கு நேர் நின்று சாதித்துக் காட்டும் நிர்வாக கட்டமைப்பு, யார் எதிர்த்தாலும் ஆர்பாட்டத்தை நடத்தியே தீருவோம் என்ற தைரியமான போக்கு போன்றவற்றை உணர்ந்த மு.கா வின் தவிசாளர் பஷீர் அவர்கள் தனது கருத்தை தைரியமாக வெளியிட்டுள்ளமை பாராட்டுக்குறியதே!


சிறை மீண்ட செல்வராக வெளியில் வருவார்

பஷீர் சேகுதாவுத் அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான சில செய்திகளை இங்கு நாம் கவனிக்க கடமைப் பட்டுள்ளோம்.

 இந்த நெருக்கடியான சூழலில் சமூகத்தை தைரியமூட்டும் வேலையை SLTJ றாஸிக் செய்வது போல் ஒரு தோற்றப்பாடு தெரிகிறது.

அவர் கைது செய்யப்பட்டுள்ளமை முஸ்லிம் இளைஞர்களுக்குள் அவரை ஒரு கதாநாயகனாகவும் ஆக்கிவிட்டுள்ளது, விடுதலை செய்யப்படும் போது சிறைமீண்ட செல்வராகவும், சமூகத்துக்காக தன்னை தத்தம் கொடுக்கவும் தயாரான தியாகியாகவும் ஒரு புடம் போடப்பட்டவராகவே வெளிவருவார்.

சமுதாயத்தை தைரியமூட்டும் ஒருவரையே தற்போது கைது செய்துள்ளார்கள் என்று குறிப்பிடும் பஷீர் அவர்கள் தொடர்ந்து இவ்வாறு எழுதுகிறார்.

இன்றைய முஸ்லிம் அரசியலில் இளமையானதும், தைரியமானதுமான கருத்துக்கள் தேவைப்படுகிற காலம் இது. மீதமிருக்கும் முதிர்ந்த முஸ்லிம் அரசியலுக்கு இப்புதிய சூழல் காயடிக்கவும் கூடும்.

பஷீர் சேகு தாவுத் அவர்கள் ஹக்கீமின் நாடிபிடித்த இடம் இதுதான்.

ஆம், ”மீதமிருக்கும் முதிர்ந்த முஸ்லிம் அரசியலுக்கு இப்புதிய சூழல் காயடிக்கவும் கூடும்” என்கிற இந்த வாசகம் இதனையே உறுதிப் படுத்துகிறது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் அமைச்சர் ஹக்கீமின் மனோ நிலை இதுதான். முஸ்லிம் சமுதாயத்தின் பெயரை சொல்லி சாகும் வரை அமைச்சராக இருந்து சுகபோகத்தை அனுபவித்து விட்டு சென்று விடுவோம். என்கிற நம்பிக்கையை தவ்ஹீத் ஜமாஅத் தவிடு பொடியாக்கிக் கொண்டு வருகிறது. ஆகவே இதனை தடுக்க என்ன செய்வது என்று சிந்தத்ததில் ஹக்கீம் பெற்றுக் கொண்ட முடிவு தான் தவ்ஹீத் ஜமாஅத்தை அடிப்படை வாதத்துடன் முடிச்சுப் போடுவதாகும்.

கிழக்கை காப்பாற்றப் பூதமாய் புறப்படத் தயாரான ஹக்கீம்

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் ஏற்படுத்திய பயம், கிழக்கின் மீதமிருக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து கட்சியை பெயருக்காவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலைக்கு தலைவர் வந்து விட்டார். அதனையும் நாடிபிடித்துள்ளார் பஷீர்.

மார்க்க ரீதியாக SLTJஉடன் உடன்படும் முஸ்லிம்கள் இலங்கையில் குறைவாகவே உள்ளனர், ஆனால் அவர்களின் அரசியலில் உடன்படும் முஸ்லிம் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். விசேடமாக கிழக்கில் மீண்டும் 80களில் நிலவிய ஒரு தைரிய சஞ்சாரம் ஊடறுப்பது தெரிகிறது.

தவ்ஹீத் ஜமாஅத் நாட்டின் பல பாகங்களிலும் தனது கிளைகளை பரப்பி வருகிறது. சுமார் 90க்கும் மேற்பட்ட ஊர்களில் இவர்களின் கிளைகள் இயங்குகின்றன. இப்படியான சூழலில் கிழக்கில் பல பாகங்களிலும் தவ்ஹீத் ஜமாஅத் ஆழமாக கால் பதித்து வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க நிலைபாடுகளில் மாற்றுக் கருத்துள்ளவர்கள் கூட அரசியல் நிலைபாடுகளை ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதிலும் இளைஞர்கள் மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்பதே பஷீர் சேகுதாவுத் அவர்களின் கருத்தின் சாரமாகும்.

ஆவியாகும் நிலையில் அஷ்ரப் உருவாக்கிய கட்சி

அமைச்சர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் என்கிற இயக்கம் இன்று சுயநல அரசியலுக்காகவும், அமைச்சுப் பதவிகளுக்காகவும் சோரம் போயிருப்பதை பார்த்து பொது மக்கள் மத்தியில் பாரிய வெருப்பு ஏற்பட்டிருக்கிறது.

1980 கால கட்டதில் விடுதலைப் புலிகளின் ஆயுதத் தாக்குதல்களையும், அராஜகங்களையும் மீறி மு.கா வை வளர்த்தெடுத்தார் அஷ்ரப். 

பொது மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் வேர் பிடிப்பதற்கு காரணமாக அமைந்தது அமைச்சர் அஷ்ரப் அவர்களின் தைரியம் தான். 

யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக குரல் கொடுக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் அவரை தலைமையாக ஏற்றுக் கொள்ள  தயாரானார்கள். ஆனால் அஷ்ரபுக்கு பிற்பட்ட மு.கா வின் காய்நகர்த்தல்கள் சமுதாய அக்கரையை விட தலைவரின் சுகபோக வாழ்வுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததுடன், சமுதாயத்திற்கு என்ன நடந்தாலும் அமைச்சுப் பதவிக்காக அமைதி காக்கும் நிலைமைக்கு கட்சியை இழுத்து சென்றது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு கட்சியின் முக்கிய போராளிகள் கூட கட்சியை விட்டும் விலகிக் செல்ல ஆரம்பித்தார்கள்.

நாளுக்கு நாள் வளர்ந்த கட்சி இன்று நாளுக்கு நாள் பின்னோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இந்நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான ஹக்கீமின் கருத்துக்களும், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவான பஷீர் சேகுதாவுத், தவம் போன்றவர்களின் கருத்துக்களும் மக்கள் மத்தியில் உள்ள எண்ணங்களை படம் பிடித்துக் காட்டுகின்றன.

எண்பதுகளில் அஷ்ரஃபின் அரசியல் முன்னெடுப்புகளை இன்று அரங்கில் காணக்கிடைக்கிறது , அதனை கருத்தியல் ரீதியாக தற்போது முன்னெடுப்பவர் அப்துல் றாஸிக் ஆகும்.

இவ்வெப்பக் காலநிலை இன்று முஸ்லிம்களுக்குள் இருக்கும் நமக்கு "மாற்றுத் தலைமை இல்லை என்கிற மூட நம்பிக்கையை" ஆவியாக்கவும் வாய்ப்புண்டு.

தலைமை என்பது பாராளுமன்றத்தில் தான் இருக்க வேண்டும் என்கிற நியதியை உடைத்து, பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் கூட சமுதாயத் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என்கிற உள்கருத்தை பஷீர் அவர்களின் வார்த்தைகள் தெளிவாக உணர்த்துகின்றன.

அஷ்ரப் நாட்டிய மரம் இன்று கொள்கை வரட்சியிலும், சுயநல அரசியலிலும் சிக்குண்டு கிளைகள் முறிந்து, வேர்கள் வெட்டப்பட்டு, தண்ணீர் ஊற்றுவதற்கு கூட ஆளில்லா நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட மரக்கட்டையாக மாறியிருக்கிறது.

உயிரிழந்த மரக்கட்டையை தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பு என்கிற உறுதியற்ற உரத்தை போட்டு உயிர்பிக்கலாம் என்று நினைக்கிறார் அமைச்சர் ஹக்கீம்.

இது வேகமாக செல்லும் விமானத்தை பார்த்து வியர்ந்து கொண்டு வியப்பதற்கு சமானமானதாகும்.

தவ்ஹீத் ஜமாஅத் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தன்னகத்தே ஆழமாக கொண்டது மாத்திரமன்றி இலங்கையில் எவ்வித அரசியர் கட்சியினாலும் செய்ய முடியாத சமுதாயப் பணிகளை செய்வதுடன், அவற்றை நடை முறைப்படுத்துவதற்கான இளைஞர் பட்டாளத்தை கொண்ட சிறப்பான நிர்வாக முறையுடன் கூடிய தெளிவாக தொண்டர் படைகளையுடைய பாரிய இயக்கமாகும்.

இந்த இயக்கத்தை கொள்கையே அற்ற சுயநல அரசியல் நம்பியாக இருக்கிற ஹக்கீம் போன்றவர்களினால் ஒன்றும் செய்து விட முடியாது என்பது மற்றவர்களை ஹக்கீமுக்கே நன்றாகத் தெரிந்த ஒன்றாகும்.

-அபூ அப்துர் ரஹ்மான்

நன்றி : நவமணி - 30.12.2016 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.