Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் - தமிழகத்தில் மூன்று நாள் விடுமுறை

Bublished By Online Ceylon on Tuesday, December 6, 2016 | 6:17 AM

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். 
அவருக்கு வயது 68. கடந்த செப்டம்பர் 22-ம் திகதியன்று உடல் நலக் குறைவு காரணமாக ஜெயலலிதாஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிறன்று அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி அதிமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அவரது மறைவையொட்டி தமிழகத்தில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் திகதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார்.  அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே!  எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.
இதனால்தான்  தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.
அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். 
அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். 
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. 
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.
1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 
1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 
2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார்.
அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.
2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.
‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். 
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved