விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரை கொலை செய்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஜுலை மாதம் 06ம் திகதியளவில் சிலாபம் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான ஆறுமுகம் புலேந்திரன்(23) என்பவர் மீது துப்பாக்கிச் சூடுநடத்தப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இன்னுமொருவர் இதன்போது காயமடைந்திருந்தார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய வாழைச்சேனை கரடிவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நபரை கைது செய்த பொலிசார் கொலை, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
சிலாபம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த வழக்கு தொடர்பில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் குற்றவாளி என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதால் அவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிப்பதாக நீதிபதி அமல் ரணராஜா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment