கொழும்பிலுள்ள கட்டார் தூதரகம் நேற்று வெளியிட்ட செய்தி

கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு தனது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்ப்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேற்படி தீர்மானம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அடிப்படைகள் அற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் எடுக்கப்பட்டது என கொழும்பிலுள்ள கட்டார் தூதரகம் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக கட்டார் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முரண்பாடுகளை தூண்டுகின்ற ஊடக பிரச்சாரங்களின் பின்னணியில் சதித்திட்டங்கள் இருப்பது தெளிவாகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“வளைகுடா ஒத்துழைப்பு சபையில் முக்கிய உறுப்பினராக இருக்கும் கட்டார், அதன் உடன்படிக்கைக்கு அமைய, ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் அதேவேளை, அவற்றின் உள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து வருவதோடு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக தனது பங்களிப்பை செய்து வருகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஊடக பிரச்சாரங்கள் பிராந்தியத்தில் விசேடமாக வளைகுடா நாடுகளில் பொதுசன அபிப்பிராயத்தில் தாக்கம் ஏற்படுத்துவதில் தோல்வி கண்டதன் பின்னணியிலேயே இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வளைகுடாவில் ஒரு சகோதர நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நியாயமான மற்றும் சட்ட பூர்வமான காரணங்கள் இல்லாமையினாலேயே இவ்வாறான புனையப்பட்ட பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
எகிப்து அரசின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் கட்டார் மீது மேலாதிக்கத்தை திணிக்கின்ற அதன் இறையாண்மையை மீறுகின்ற செயற்பாடாகும் எனவும் கட்டார் அரசு குற்றம் சுமத்தி உள்ளது.
கட்டார் உடனான உறவுகளை துண்டிப்பதற்காக வலிந்து கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள், அந்நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சதியின் பின்புலத்திலேயே கடந்த கால புனையப்பட்ட ஊடக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினை ஊர்ஜிதப்படுத்துகின்றன.
இந்த தீர்மானம் கட்டார் தேசத்தவர்களதும் அங்கு தங்கி இருப்பவர்களதும் இயல்பு வாழ்க்கையிலோ கட்டார் தேசத்தின் பொருளாதாரத்திலோ எத்தகைய பாதிப்புக்களையும் ஏற்படுத்துவதனை கட்டார் அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளும், மக்களும் எதிர்கொண்டுள்ள பிரதான சவால்களை கவனத்திற்கொள்ளாது மூன்று நாடுகளும் மேற்படி தீர்மானங்களை மேற்கொண்டிருகின்றமை குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சு மேலும் தனது கவலையை தெரிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள கட்டார் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.