ஜிந்தோட்டைக்கு கலவரத்திற்கு, யார் காரணம்..?

முஹிடீன் M.A. (Cey.)
கடந்த அரசாங்க கால வடுக்கள் மனதை விட்டும் நீங்காத நிலையில் கிந்தொட்ட நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அளுத்கம சம்பவம் ஒரு ஆட்டோ சம்பவத்தின் அடியாக ஆரம்பித்தது போல, கிந்தொட்ட சம்பவம் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்திலிருந்து புகைந்து பற்றியது என்று சொன்னால் வரலாற்று நினைவுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.

வீடுகள் உடைப்பு, கடைகள் தீவைப்பு, வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் சோதம் என பொருளாதார ஒழிப்பு நடவடிக்கைகள் இனவாதிகளினால் கிந்தொட்டயிலும் அரங்கேற்றப்பட்டன.

பொலிஸ் தகவல்களின்படி, இவ்வசம்பாவிதத்தில் சேதமடைந்த வீடுகள் – 66 எனவும், சேதமடைந்த வியாபார நிறுவனங்கள் – 26 எனவும், சேதமடைந்த பள்ளிவாயல்கள் இரண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன், பாதையில், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கிந்தொட்ட அசம்பாவிதம் ஏற்படுத்திய விபரீதங்களின் விபரம்.

பாதுகாப்புக்கு வந்த பொலிஸார் வேடிக்கை பார்த்ததாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் நடமாடுவதைத் தடுத்து தீவிரவாதக் கும்பலுக்கு இடங்கொடுக்கவே களத்தில் செயற்பட்டதாகவும் கடந்த காலத்தில் அளுத்கமை முஸ்லிம்கள் தமது கவலைகளாக முன்வைத்தது நினைவுக்கு வருகின்றது.

கிந்தொட்டயிலும் சம்பவத்தை அனுபவித்த மக்கள், ஒருபடி மேலே சென்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டவர்களும் சேர்ந்தே சேதம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும், இதனை தான் கண்ணால் பார்த்ததாகவும் எந்த இடத்திலும் சாட்சி கூற வரத் தயார் எனவும் கூறுவதை நாம் உண்மையான வீடியோ காட்சிகளில் கண்டு கவலைப்பட்டோம்.

கிந்தொட்டயில் இவ்வாறான ஒரு நிலைமை வரும் என பாதுகாப்புப் பிரிவு ஏற்கனவே அறிந்திருந்தும் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதில் தவறிழைத்து விட்டதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அப்பிரதேச செய்திகளை வெளியிட வேண்டாம் என பொலிஸ் தலைமையகமும், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னநாயக்கவும் அறிவித்தல் விடுத்திருந்தமையும், உண்மையான செய்திகளையும் வதந்தி சாயம் இட்டு பொய்யாக்க முற்பட்டதையும் நாம் அனைவரும் ஊடகங்களில் கண்டோம்.

பெரும்பாலான சகோதர ஊடகங்கள் கிந்தொட்ட அசம்பாவிதங்களில் சேதங்களே ஏற்பட வில்லையென்பது போலவும் ஒரு சில வீடுகளின் யன்னல் கண்ணாடிகள் தான் கல்வீச்சுத் தாக்குதலில் உடைந்துள்ளது போலவும் காட்டின. இது ஒரு சமூகத்தின் முதுகெலும்பான பொருளாதார அழிவை பட்டப்பகலில் மூடிமறைக்க எடுத்த ஊடக துஷ்பிரயோகம் என்றே பார்க்கப்படுகின்றது.

உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பது நியாயமற்றதாகும். முஸ்லிம்கள் விட்ட தவறுகள் தான் இந்த இனவாத செயற்பாடுகளின் பின்னணிக் காரணமும், உடனடிக் காரணமும் ஆகும் என்பது வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு கசப்பான உண்மையாகும்.
தர்கா நகரில் விட்ட தவறையே காயம் காய்வதற்கு முன்னர் மீண்டும் விட்டுள்ளனர் என பல சமூக புத்திஜீவிகளும் சிந்திந்து கவலைப்படுகின்றனர். இந்த நாட்டில் இனவாத விதைகள் பாடசாலை மாணவர்கள் உள்ளங்கள் தொடக்கம் தூவப்பட்டுள்ளன. அவற்றுக்கு நீர் ஊற்றும் பணியில் ஈடுபடாது தவிர்ந்து கொள்வது மாத்திரமே இனவாதிகளின் செயற்பாட்டுக்கான தடைப்புள்ளியாகும்.

இது எனது வீடு. நீ இதில் குடியிருப்பவன். உன்னால், வீட்டுக்கு உரிமைகோர முடியாது. வீட்டு உரிமையாளனுக்குரிய மரியாதையை நீ கொடுத்தேயாக வேண்டும் என்ற சிந்தனையையே இனவாதிகள் விதைத்து வருகின்றனர்.

இனவாதக் குட்டைகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உறைந்து போயுள்ளன. அவை சில நல்லவர்களிடையேயும் குழுங்கும் போது நல்ல நீரையும் அசுத்தமாக்கி விடுகின்றன. எல்லோரையும் நல்லவர்களாக சிந்திக்க வைக்கும் ஒரு யதார்த்தமான முயற்சி இஸ்லாம் காட்டும் வழிகாட்டலில் தான் உள்ளது என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்தாது போனால் அது தவறாகும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.