ஜெருசலம் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டை ஐ.நா. நிராகரித்தது

ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அங்கு தூதரகம் அமைக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. ஜெருசலம் தொடர்பான அமெரிக்க அதிபரின் அறிவிப்பு வெளியானதையடுத்து, முஸ்லிம் நாடுகளில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்துக்கான தலைமையேற்றுள்ள ஜப்பான் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. 
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தின்போது, பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தன. 
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஜெருசலம் சர்ச்சை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது; அவற்றுக்கு விரோதமாக அமெரிக்காவின் அறிவிப்பு அமைந்ததாக அந்த நாடுகள் விமர்சித்தன. "கிழக்கு ஜெருசலேம், பாலஸ்தீனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றும், ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரம் இஸ்ரேல் - பாலஸ்தீனின் கூட்டுத் தலைநகராக இருக்க வேண்டும்' என்பதே பிரிட்டன் நிலைப்பாடு என்று ஐ.நா.வுக்கான அந்நாட்டு தூதர் மாத்யூ ரைக்ராஃப்ட் கூறினார். 
ஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பை விளக்கி பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறியது: ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை அமைக்கவும் அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவும் முடிவு செய்து அமெரிக்க அதிபர் அறிவிப்பு வெளியிட்டார். இது பல கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பும் என்று தெரிந்துதான் மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்த முடிவை அவர் அறிவித்தார். 
அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்த அறிவிப்பு உதவும். அனைத்துத் தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொண்டால்தான் அமைதிக்கான முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் காண முடியும். தற்போதைய உண்மை நிலவரத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
எது ஏற்கெனவே வெளிப்படையாக உள்ளதோ, அதனை அமெரிக்கா அங்கீகரித்திருக்கிறது. ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகர். டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதை மட்டும்தான் அதிபர் செய்துள்ளார். ஜெருசலேம் நகர்ப்புற எல்லை வரையறைகள், எந்தப் பகுதியில் யார் யாருக்கு உரிமை உண்டு போன்ற விவகாரம் எதையும் அதிபர் அறிவிப்பு தொடவேயில்லை. அது இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டியது என்று அமெரிக்கா இப்போதும் கூறுகிறது. 
 ஜெருசலம் எல்லைக்கோடுகள் குறித்து அதிபர் எதுவும் கூறவில்லை.
 அப்பகுதியில் இரு தரப்பினரும் கோரும் இறையாண்மை குறித்து அதிபர் கருத்து வெளியிடவில்லை. அதையெல்லாம் இஸ்ரேலியரும் பாலஸ்தீனரும் பேசித் தீர்வு காண வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. 
தற்போது மலைக்கோயில், அல்-அக்ஸா மசூதியில் நடைபெற்று வரும் நிர்வாகம், வழிபாடு ஏற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு கொண்டு வரவில்லை. அங்கு தற்போதுள்ள ஏற்பாடே தொடர வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். இவ்வாறு நிக்கி ஹேலி தெரிவித்தார்.
அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன் கூட்டறிக்கை வெளியிட்டன. "அமெரிக்காவின் அறிவிப்பு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் இல்லை; அந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட இந்த அறிவிப்பு உதவாது; இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான பேச்சுவார்த்தை மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்' என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- www.dinamani.com

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.