உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் உங்கள் அமானிதமும் - ஷிப்லி பாரூக் அவர்களின் செய்தி

என்றும் என்னுடைய அன்புக்கும் மரியாதைக்குமுரிய காத்தான்குடி வாழ் சகோதர சகோதரிகளே! தாய்மார்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

நம்மை எதிர் நோக்கியிருக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக முக்கியமான சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதே இத்துண்டுப் பிரசுரத்தின் பிரதான நோக்கமாகும்.

எதிர் வரக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்த வரைக்கும் இதுவரையிலும் இருந்தது போன்றல்லாமல் வட்டார ரீதியாக வகுத்து நடைபெறவுள்ள ஒரு தேர்தல் என்பதை நாம் அறிவோம். அத்தோடு இந்த வட்டார அடிப்படையிலான தேர்தல் முறையில் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களும் நன்மை, தீமைகளும் நாம் எல்லோரும் நன்கறிந்தவையாகும்.

அந்த வகையில் நமது காத்தான்குடி நகர சபையின் தலைமைத்துவத்திற்கும் உறுப்புரிமைக்கும் பொதுமக்களாகிய உங்களுடைய தேவைகளை நன்கறிந்து உணர்வுகளையும் புரிந்துகொண்ட அதேநேரம் ஊழல், மோசடிகள் இல்லாத நேர்மையான ஒரு தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யவேண்டிய கட்டாய சூழலிலும் நாம் காணப்படுகின்றோம்.

இதனை மையமாக வைத்து காத்தான்குடியின் பல இடங்களில் இருந்தும் பலரும் என்னைத் தொடர்புகொண்டு தன்னை ஒரு வேட்பாளராக நிறுத்துமாறும் தனக்காக ஒரு இடத்தை வழங்குமாறும் என்னை வேண்டிக்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த ஊரின் வட்டார ரீதியான பிரதிநிதித்துவமானது என்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட நபர்களுடைய சுய இலாபத்திற்காகவோ தாரை வார்க்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாகவும் கண்காணிப்பாகவும் இருந்து வருகின்றேன்.

என்னையும் என்னுடைய அரசியல் பயணத்தையும் பொறுத்தவரையில் எனக்கு ஆலோசனை வழங்குவதற்கும் என்னை வழிநடாத்துவதற்கும் பொதுமக்களாகிய உங்களை மாத்திரமே நான் சுயாதீனமாக நியமித்துள்ளேன் என்பது நீங்களே அறிவீர்கள். அதன் காரணமாக எதிர்வரும் நகர சபைத் தேர்தலில் வட்டார ரீதியான வேட்பாளர்களை நியமிக்கின்ற விடயத்திலும் பொதுமக்களாகிய உங்களுடைய விருப்பு, வெறுப்புக்கள் மற்றும் ஆலோசனைகளையே நான் வேண்டி நிற்கின்றேன்.

கடந்த காலங்களில் பொதுமக்களாகிய நீங்கள் என்மீது வைத்த எந்தவொரு நம்பிக்கையையும் நான் வீணடிக்கவில்லை. நீங்கள் எந்த எதிர்பார்ப்பில் எனக்கு வாக்களித்து என்னை மாகாண சபைக்கு தேர்வு செய்தீர்களோ அந்த எதிர்பார்ப்புக்களுக்கும் அதிகமாகவே நான் உங்களோடு நடந்துகொண்டேன். இன்ஷாஅல்லாஹ், இனியும் நடந்துகொள்வேன். இதை நான் விரிவாக விபரிக்க வேண்டியதில்லை, காரணம் பொதுமக்களாகிய உங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியமைக்கான சாட்சியங்களை இவ்வூரின் ஒவ்வொரு மூலை, முடுக்குகளுக்குள்ளேயும் நான் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றேன், அல்லாஹ்வின் உதவியால்.

உதாரணமாக:

* காத்தான்குடியில் குன்றும் குழியுமாகவும் போக்குவரத்துக்கு உதவாத விதத்தில் காணப்பட்ட பல வீதிகள் புனரமைப்பு.

* காத்தான்குடியின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகளுக்குப் பௌதீக ரீதியாகவும், ஆளணி ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வழங்கப்பட்ட நிதிகளும் வசதிகளும்.

* காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு பல கோடி ரூபாய்கள் நிதியினை ஒதுக்கி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ரீதியான அபிவிருத்திகள்.

* காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்படும் மேல்மாடி கட்டிடம்.

* காத்தான்குடி நகர சபையினூடாக தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள களிவு முகாமைத்துவ கட்டிடம்,

* வெள்ள காலத்தில் நீர் வளிந்தோடக்கூடியவாறான சிறிய தோணா நிர்மானம் போன்ற பாரிய நிதி ஒதுக்கீடுகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நிரந்தமான அபிவிருத்திகளை குறிப்பிட முடியும். இவ்வாறாக மிகக்குறுகிய காலத்திற்குள் அதிகமான வேலைத்திட்டங்களை அல்லாஹ்வின் உதவியுடன் செய்து முடித்துள்ளேன் இதில் சிலவற்றை என்னுடைய சொந்த நிதியில் இருந்தும் செய்துள்ளேன்.

* மேலும் காத்தான்குடியை அண்டிய கிராமங்களில் விடுதலைப் புலிகளாலும் ஏனைய ஆயுதக் குழுக்களாலும் அபகரிக்கப்பட நமது சகோதரர்களின் காணிகளை மீட்பதற்கான முன்னெடுப்புக்களும் அதற்கான அடைவுகளும்.

* குருக்கள் மடத்தில் கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்ட நமது உடன் பிறப்புக்களின் ஜனாஸாக்களை மீட்டெடுக்க முயற்சித்து இந்த சமூகத்திற்கு இழைக்கப்பட்ட பட்டவர்த்தனமான அநியாயத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றது.

* மேலும் முக்கியமாக நமதூரின் நெடுங்காலத் தேவைகளில் இன்றியமையாத ஒன்றாக இருந்துவந்த குப்பை களிவகற்றுவதற்கான காணியை பெற்றெடுப்பதற்காக முன்னெடுத்த முயற்சியில் தற்போது ஐந்து ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டு காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற மாவட்ட அபிவிருத்திக்குழு தீர்மானமும் அதற்கான முன்னெடுப்புகளும்.

இவ்வாறு அபிவிருத்தி ரீதியாகவும் சமூகத்தின் உரிமை மீட்பு ரீதியாகவும் பல்வேறு துறைகளையும் தொட்டதோடு மட்டுமன்றி அல்லாஹ்வின் உதவியால் அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளையும் என்னுடைய இந்த சிறியளவிலான அதிகாரக் காலப்பகுதியில் முன்னெடுத்துள்ளேன்.

மேலும் நமது பிரதேசத்தில் பொருளாதார மட்டத்தில் பின்தங்கி அதேநேரம் வெட்கத்தின் காரணமாக தமது நிலைமையை வெளியில் சொல்ல முடியாமல் சுய கௌரவத்துடன் சிரமத்திற்கு மத்தியில் வாழ்கின்ற அடித்தட்டு மக்களைத் தேடிச்சென்று அவர்களுடைய குறைகளை என்னால் முடியுமானவரைக்கும் தீர்த்து வைக்கின்றேன். அவர்களுக்கு சுய தொழில்களுக்கான வசதிகளையும் செய்து கொடுக்கின்றேன்.

அதேபோன்று கடந்த காலங்களில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு அற்றுப்போனதன் காரணமாக ஏற்பட்ட மோசமான விளைவுகளை இனிவரும் சந்ததிகளும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கும் முடியுமானவரை பல உதவிகளையும் பிரதேச அபிவிருத்திகளையும் செய்துகொடுத்துள்ளேன். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைப் பற்றியும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் சமூகப்பணியாளர்கள் பற்றியும் மிகச்சிறந்ததொரு புரிதலை அம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் ஏற்படுத்தியுள்ளேன்.

இவ்வாறு அல்லாஹ்வின் நாட்டத்தாலும் உங்களின் வாக்குகளாலும் எனக்கு அமானிதமாகக் கிடைத்த இந்த சமூகப்பொறுப்பை என்னால் முடியுமானவரை அல்லாஹ்வுக்குப் பயந்து செவ்வனே நிறைவேற்றியுள்ளேன், அல்ஹம்துலில்லாஹ்.

இதுதவிர, என்னுடைய அரசியல் செயற்பாடுகள் இதுகால வரைக்கும் இந்தப் பிரதேசத்தில் கோலோச்சிவந்த பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தை விட்டும் வேறுபட்டவை. மேலும் அடுத்தவர்களை மோசமாக விமர்சித்து, வம்பிழுத்து, காழ்ப்புணர்ச்சிகொண்டு சண்டையிடுகின்ற நெறிபிறழ்ந்து முறைதவறிய கலாச்சாரத்தில் இருந்தும் தூய்மையானவை.

மட்டுமன்றி என்னுடைய அரசியல் பயணமானது இஸ்லாமிய மார்க்க ரீதியான விழுமியங்களுக்கும் கலாச்சார நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவையாகும்.

இவ்வாறு தூய மார்க்கமான இஸ்லாத்தின் அடிப்படைகளை முடியுமானவரை அடித்தளமாக இட்டு அதன் பின்னணியில் இருந்தே என்னுடைய மனசாட்சிக்கு விரோதமற்ற விதத்தில் நான் செயற்பட்டு வருகின்றேன். (மனிதன் என்னும் அடிப்படையில் நிகழ்கின்ற தவறுகளைத்தவிர). அந்த வகையில் நான் மேலே குறிப்பிட்டுள்ள நிலைப்பாடுகளையும் இலட்சியங்களையும் தன்னகத்தேகொண்ட வேட்பாளர்களையே எதிர்வரும் நகரசபைத் தேர்தலில் முன்னிறுத்தவும் எண்ணம் கொண்டுள்ளேன்.

இதற்காக பொதுமக்களாகிய உங்களிடமிருந்து பிரேரணைகளையும் மேலதிக ஆலோசனைகளையும் எதிர்பார்கின்றேன். நீங்கள் அளிக்கின்ற உங்களுடைய பெறுமதியான வாக்குகள் சென்றடையவேண்டிய இலக்குகளை நீங்களே தெரிவு செய்யுங்கள். உங்களுடைய பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, உங்களுக்காக உழைக்கக்கூடிய மக்கள் சேவையாளர்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களுடைய பகுதியில் வசிக்கின்ற சமூகப்பற்றுள்ள, சமுதாய உணர்வுள்ள, மார்க்க விழுமியங்களைப் பேணக்கூடிய, சுயநலமற்ற, அடுத்தவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தக்கூடிய, கல்வியறிவுள்ள, நேர்மையான நபர்களை, இளைஞர்களை பிரேரியுங்கள்.

தனித்தனி நபர்களாக வாழக்கூடிய நம் ஒவ்வொருவரும் சேர்ந்ததுதான் இந்த ஒட்டுமொத்த சமூகமாகும். தனி மனிதர்களாக வாழ்கின்ற நாம் ஒவ்வொருவருமே இந்த சமூகத்திற்கான தலைமைத்துவத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாகவும் விளங்குகின்றோம். அது நமது தலையாய கடமையாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் நமக்கான தலைமைத்துவத்தையும் பிரதிநிதித்துவத்தையும் நாமே தெரிவுசெய்வோம் என்ற அடிப்படையில்தான் அந்தப்பொறுப்பை உங்களிடம் இத்தால் அமானிதமாக ஒப்படைக்கின்றேன்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.