தமிழ் முற்போக்கு கூட்டணி நல்லாட்சியிலிருந்து வெளியயேறவுள்ளது – வடிவேல் சுரேஷ்

“பதுளையில் பெண் அதிபரை மண்டியிடவைத்த ஊவா மாகாண முதலமைச்சரை அப்பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அநீதி இழைக்கப்பட்ட அதிபருக்கு நீதி வழங்கப்படவேண்டும். அவ்வாறு இல்லையேல் தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களுடன் அரசிலிருந்து வெளியேறி, மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடுவேன்” என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்
குறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“ஊவா மாகாண கல்வி அமைச்சை கீரியிடமிருந்து பிடுங்கி நரியிடம் கொடுத்துள்ளனர். ஊவா மாகாண கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான், அரச ஊழியரைத் தாக்கிய ஒருவராவார்.
அவர் இதற்கு முன்னர் பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபரை வெளியே விரட்டி அவரது ஆசனத்தில் அமர்ந்தவர். அவர் நியமிக்கப்பட்டவுடன் மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் பதறியடித்துக்கொண்டு என்னுடன் அலைபேசியில் தொடர்புகொள்கின்றனர்.
அரச சேவையில் இருந்த தபால் ஊழியரைத் தாக்கிய குற்றச்சாட்டில் செந்தில் தொண்டமான் மீது வழக்கொன்று இன்றும் பண்டாரவளை நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது.
அத்துடன், மாகாண கல்வி அமைச்சுப் பொறுப்பு சாமர சம்பத் தசநாயக்கவிடம் இருந்தபோதும், உத்தியோகப்பற்ற முறையில் தமிழ்க் கல்வி அமைச்சின் பொறுப்புகளை செந்தில் தொண்டமானே கவனித்து வருகின்றார். அவரின் கண்காணிப்பில் இருக்கும் நிலையில் பெண் அதிபருக்கு இவ்வாறான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், செந்தில் தொண்டமானிடம் உத்தியோகபூர்வமாக அந்த அமைச்சை மீண்டும் ஒப்படைக்கும்போது அவர் எவ்வாறு நடந்துகொள்வார் என்று யோசிக்கவேண்டியுளள்ளது. அங்குள்ள பெருந்தோட்ட மாணவர்களின் எதிர்காலம் இதனால் நாசமாகும் என்பதை ஜனாதிபதி கவனத்தில் எடுக்கவேண்டும். கல்வி அமைச்சு பதவியை வழங்க தகுதியான பலர் மாகாண சபையில் இருக்கும் நிலையில், எந்தவித தகுதியும் இல்லாத ஒருவருக்கு எவ்வாறு அதனை வழங்க முடியும்?
இந்தியா, தமிழக அரசியல் நடவடிக்கைகள் இங்கு சரிவராது. இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் அவர் அங்கு செல்லவில்லை. கல்வி அமைச்சுப் பதவி கிடைத்த பின்னர்தான் செந்தில் தொண்டமான் அந்தப் பாடசாலைக்குச் சென்றார்.
கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து அதிபரை மண்டியிடவைத்துவிட்டு பின்னர் முதலமைச்சர் தனது வியாபார ஊடகவியலாளர்கள் ஊடாக பொய்யான குரல் பதிவை வழங்கி இந்த விடயத்தை மூடி மறைத்துவிட்டார்.
9ஆம் திகதிக்குப் பின்னர்தான் இந்த விடயம் சிறிது சிறிதாக வெளியில் வந்தது. அத்துடன், முதலமைச்சரான சாமர சம்பத் தசநாயக்கவும் இதற்கு முன்னர் ஊவா மாகாண பெண் கணக்காளருக்கு இவ்வாறு செய்து அதற்கு எதிராக ஊழியர்கள் வீதியில் இறங்கினர். ஊவா பரணகம பிரதேச செயலாளர் விடயத்திலும் முதலமைச்சருக்கு எதிரான ஊழியர்கள் வீதியில் இறங்கினார்கள்.
இந்தச் சம்பவங்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்பதற்கப்பால், அரசியல்வாதிக்கு இவ்வாறான அதிகாரம் இல்லை. இந்த தமிழ்ப் பெண் செய்த தவறு என்ன? அவர் முதலமைச்சரிடம் மண்டியிட்டதை நிரூபிக்க ஊடகங்கள், பொலிஸ் என பலர் முன்னிலையில் அதனை செய்துகாட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரிடம் 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.
குற்றமிழைக்கப்பட்டவரை இவ்வளவு நேரம் விசாரித்தால் குற்றம் இழைத்தவரை 6 நாட்களாவது விசாரிக்கவேண்டும். இந்த நாட்டில் சுதந்திரக் கல்வி உரிமைக்கு என்ன நடந்தது? ஜனாதிபதியே, எமது சமூகம்தான் எமக்கு முக்கியம். அதற்காக எதையும் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அதற்கு அரசியல்தான் தடையென்றால், அதிபர் பவானிக்கு நீதி கிடைப்பதற்காக அரசியலிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகிவிட்டு, இராஜிநாமா செய்துவிட்டு ஆசிரியர்களுடன் வீதிக்கு இறங்கத் தயாராக இருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.