உம்மத்தின் பிளவுக்குக் காரணம் பள்ளி நிர்வாகங்களா..?..!!

நேற்று முன்தினம் வாழைச்சேனையில் நடந்த அசம்பாவிதம் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டியிருக்கும். 
அது தொடர்பில் அவ்வூரின் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல் உற்பட பல அமைப்புக்களும் ஒன்றினைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதை சமூக வளைத்தளங்களில் காணலாம். அதன் பிரதிகள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, வாழைச்சேனை பொலிஸ் நிலையம், கல்குடா ஜம்இய்யதுல் உலமா, கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதை நிதானமாக படிக்கும்போது அவ்வூரில் இன்னொரு பள்ளி அமைவது பிரச்சனையல்ல. ஊர்வழமையை கடை பிடிப்பதை விட்டும் நபிவழமைகளை கடை பிடிக்கும் ஏகத்துவ பள்ளி அமைவதே பிரச்சனை என்பதை அவ்வறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.

உரத்துச் சொல்கிறோம். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் ஏகத்துவமே வெல்லும். உங்கள் அத்துமீறலால் பூட்டப்பட்டுள்ள மஸ்ஜித் சட்ட அனுமதியுடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து மக்கள் வருகையும் சத்தியத்தின் அசுர வளர்ச்சியும்  உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதுவே ஏகத்துவம் கண்டு வந்த வரலாறு.

தப்லீக் சகோதரர்களே
📍➖➖➖➖➖➖➖📍

 நீங்கள் ஒரு யதார்த்தத்தை புரிந்து கொள்ள மறுப்பது ஏன்?

இத்தீவின் ஏகத்துவ வரலாற்றை நிதானமாகப் படித்தால் ஒரு உண்மை புரியும். அது - ஏகத்துவம் பேசப்பட்ட போதெல்லாம் அதன் குரல்வளையை நசுக்கி பிரச்சாரத்தை முடக்க எத்தனையோ முயற்சிகளும், சர்வாதிகாரங்களும் அரங்கேறின. எனினும் எதிர்க்க எதிர்க்க வளர்ந்தது ஏகத்துவம் தான் என்பது வரலாறு.

இந்த உண்மையை உணர முடியாமல் உங்களைத் தடுப்பது எது?

அது மட்டுமல்ல! ஏகத்துவத்தின் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட ஒவ்வோர் ஊர் மஸ்ஜித்களும் அடிக்கப்பட்டன. உடைக்கப்பட்டன. ஏகத்துவ சகோதரர்கள் தாக்கப்பட்டனர். ஷஹீதாக்கவும் பட்டனர். எங்காவது ஒரு ஊரில் ஒரேயொரு ஏகத்துவ பள்ளியாவது இழுத்து மூடப்பட்டு சத்தியம் தோல்வியுற்ற வரலாற்றை கண்டீர்களா? ஏகத்துவத்தின் வளர்ச்சி முடங்கிப் போன ஒரேயொரு வரலாற்றையேனும் காட்ட முடியுமா? வெட்ட வெட்ட அழகாக கிளை விட்டு வளரும் மரமும், எதிர்க்க எதிர்க்க, வளரும் ஏகத்துவமும் உங்களுக்கு இன்னும் யதார்த்தத்தை உணர்த்தவில்லையா?

இன்னுமொரு வகையில் பாருங்கள். சில ஊர்களில் அடிதடியை விரும்பாத நிதானமான மக்கள் இருந்தார்கள். எனினும் அவர்கள் ஏகத்துவத்தை மறுத்ததன் அல்லது விளங்கிக் கொள்ளாததன் விளைவாக சட்ட ரீதியாக எதிர்த்தார்கள். பொலீஸ், கோர்ட், வக்ப் சபை என்று அலைந்தார்கள்.  அனைவரும் கைவிட்டதும் உலமாசபையின் பக்கம் திரும்பினார்கள். நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஊர் மக்களுக்குள் பகைமையை வளர்த்துக் கொண்டது தான் மிச்சம். எங்கேனும் ஒரேயொரு ஏகத்துவ மஸ்ஜிதைக் கூட  உங்களால் இழுத்து மூட முடியவில்லை. இதுவொன்றே சத்தியத்தை விளங்க உங்களுக்கு போதுமான சான்றல்லவா.

தப்லீக் மட்டும்தான் எமதூரில் இருக்க வேண்டும் என்று கூற தப்லீக் மட்டும் அர்ஷின் அங்கீகாரம் பெற்ற அமைப்பா சகோதரர்களே! அல்து தப்லீக் நூல்களில்  காணப்படும் மார்க்கத்துக்கு முரணான அபத்தங்களை மறுப்பது பாவமா?

ஆரம்ப காலங்களில் விட்ட பல தவறுகளை தப்லீக் ஜமாத் பிற்பட்ட காலங்களிலாவது திருத்திக் கொள்ள முன்வரும் எனும் நம்பிக்கையில் நாமிருக்க! மீண்டும் மீண்டும்  ரவ்டித்தனங்களில் நீங்கள்  இறங்குவது தப்லீக்கின் எந்த உசூலின் அடிப்படையில் செய்கிறீர்கள்?

உங்களது அவசரப் புத்தியால் நடந்தது என்ன?
📍➖➖➖➖➖➖➖📍📍➖➖➖➖➖📍

உங்கள் முன்மாதிரிகளை கையில் எடுத்த இனவாதிகள் உங்களையே பின்பற்றினர். உங்களது அதே பாணியில் இனவாதம் கக்க ஆரம்பித்தார்கள்.

👉இந்த ஊரில் தப்லீக் தவிர எதற்கும் இடமில்லை என்றீர்கள் நீங்கள். இந்நாட்டில் பௌத்தம் தவிர்ந்த எதற்கும் இடமில்லை என்றார்கள் அவர்கள்.

👉 ஊர் வழமையை மார்க்கமாக முன்னுரிமை வழங்கினீர்கள் நீங்கள். பாரம்பரியம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றார்கள் அவர்கள்.

👉ஏகத்துவவாதிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து பொலீஸ், நீதிமன்றம் என போலி முறைப்பாடுகளை செய்தீர்கள் நீங்கள். இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் வளர்வதாகக் காட்டி இனவாதம் வளர்த்தார்கள் அவர்கள்.

❓கடைசியில் பாதிக்கப் பட்டது யார்? "ஏகத்துவவாதிகள் மட்டுமா?"
❓யாருடைய இல்லங்களும், கடைகளும்,  வாகனங்களும் எரியூட்டப்பட்டன. "ஏகத்துவவாதிகளது மட்டுமா?"

எதிலும் உண்மையை/ யதார்த்தத்தை நிதானமாக விளங்க மறுக்கும் உங்களது புண்ணியத்தால் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது புரிகிறதா?

தனக்குத்தானே மண்ணைவாரி தலையில் கொட்டிக் கொள்ள முயலும் அடுத்த ஆபத்து.
📍➖➖➖➖➖➖📍📍➖➖➖➖➖➖📍

ஏகத்துவத்தின் வளர்ச்சியை தடுக்க நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் காலியானதன் விளைவாக அதிரடியான புதியதோர் முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். வக்ப் சபையில் ஜும்ஆ மஸ்ஜிதாக பதியப்படாத பள்ளிகளில் ஜும்ஆ நடத்த முடியாது என்ற கருத்தை திணித்து ஏகத்துவ பள்ளிகளை முடக்க கிளம்பியுள்ளீர்கள் என்பது அறியக்கிடைக்கிறது.

அரசியல் மற்றும் உங்கள் அறியாமை கூட்டு சேர்ந்து இப்பயணத்தில் கால் பதித்துள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் இதன் விளைவு மிக  ஆபத்தானது. குறிப்பாக, எங்களை விடவும் உங்களுக்கு மிக ஆபத்தானது. ஏகத்துவ பள்ளிவாயல்களில் அநேகமானவை நாட்டின் மதச்சுதந்திர பொதுசிவில் சட்டத்தின் கீழ் இயங்குபவை என்பது உங்களுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் எந்தப் பதிவுமின்றி ஏராளமான பள்ளிகளை நீங்கள் உருதிப் பத்திரம்கூட இன்றி நடத்துகின்றீர்கள் என்பதை நாம் அறிவோம்.

வக்ப் என்பது இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிசிவில் சட்டங்களுக்கு உட்பட்டதாகும். தனிச்சிவில் சட்டம் உம்மத்திற்கு அவசியமானதொன்று என்பதை நாம் கடுகளவும் மறுக்கவில்லை. நீங்கள் பொதுச்சிவில் சட்டத்துடன் தனிச்சிவில் சட்டத்தை மோதவிட்டுப் பார்க்க களமிறங்கியுள்ள இவ்வறியாமை நிச்சயம் ஏகத்துவத்தின் ஜோதியை அணைக்காது. எனினும் உம்மத்தின் உரிமையில் கடுமையான தாக்கமொன்றை ஏற்படுத்தும் என்பது சர்வநிச்சயம். உங்கள் பள்ளிகளை பட்டியல் படுத்திப் பாருங்களேன். எத்தனைப் பள்ளிவாயல்கள் வக்ப் சபையில் பதியப்பட்டுள்ளன? உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிக் கொட்டப் போகிறீர்களா? தனிசிவில் சட்டத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் வக்ப் சபையை நாடி ஏகத்துவத்தை அடக்க முயன்றால், ஏகத்துவத்தை காக்கும் தர்மப் போராட்டத்துக்காக பொதுசிவில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஏகத்துவவாதிகள் நீதிமன்றங்களை நாடுவர் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

உரத்துக் கூறுகிறோம். சட்டம் தன் கடமையைச் செய்யும். இன்ஷா அல்லாஹ் இங்கும் ஓங்கப் போவது ஏகத்துவமே. காரணம் அது அல்லாஹ்வின் ஓர்மையை பாதுகாக்கும் சத்தியஜோதி. என்றாலும் உம்மத்தும், உங்களது பள்ளிகளும் பாரிய புதியதோர் நெருக்கடியை சந்திக்கும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வீணான குழப்பங்களை உண்டு பன்னி சமூகத்தின் எதிர்காலத்தை மேலும் நெருக்கடியில் தள்ளுவதை விட்டும் ஒதுங்குங்கள்.

குழப்பத்தை உண்டு பண்ணி விட்டு குழப்பவாதியாக எம்மை சித்தரிப்பது உங்களுக்கு கைவந்த கலைதான். என்றாலும் ஏகத்துவக் கொள்கையானது சத்தியத்துக்கு முன்னால் எதையும் சமப்படுத்திப் பார்க்காது. தன்னை பெற்ற உயிரானாலும், தன்னுயிரானாலும் அதனை தியாகம் செய்தேனும் ஏகத்துவத்தை காக்கவே ஏகத்துவவாதிகள் களமிறங்குவார்கள். அங்கு உங்களது ஊர்வழமைப் பள்ளிகளை வழக்கில் சிக்க வைத்துத்தான் ஏகத்துவத்தைக் காக்க வேண்டும் என்கிற நிலமை ஏற்படின், அது உங்கள் அறியாமையால் ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் என்றெண்ணி ஏகத்தும் தன் பயணத்தை தொடரும் என்பதை வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும் கூறி வைக்கிறோம். அதனால்தான்! *தனக்குத்தானே மண்ணைவாரி தலையில் கொட்டிக் கொள்ள முயலும் அடுத்த ஆபத்து* என தலைப்பிட்டுள்ளேன்.

மர்மம் என்னவோ!
📍➖➖➖➖➖📍

ஏகத்துவத்தின் வளர்ச்சியால் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல்கள் களை பிடுங்கப்பட்டுள்ளன. மௌட்டீக மாந்திரீக பழக்கங்கள் களை பிடுங்கப்பட்டுள்ளன. வரதட்சனை, வட்டி போன்ற வன்கொடுமைகள் களை பிடுங்கப் பட்டுள்ளன. எண்ணிலடங்கா விதவைகள், அநாதைகளது  வாழ்வாதாரங்கள் நிறைவு செய்யப் பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாத்தைப் படிக்கும் சமூகமொன்று உருவாகியுள்ளது.  நன்மைகளைத்தவிர ஏகத்துவத்தின் வளர்ச்சியால் விளைந்த தீமைகள்தான் என்ன? எதற்காக ஏகத்துவத்தை எதிர்த்து உங்களை நீங்களே ஈருலக கேவலத்தில் தள்ளிக் கொள்கிறீர்கள்?

ஷிர்க்கை எதிர்க்காமல் வெளிச்சம் வந்தால் இருள் அகன்றுவிடும் என்று கொள்கை பேசும் நீங்கள், சீதனம் போன்ற சமூக கொடுமைகளை எதிர்க்காமல் அதற்கும் அல்பாத்திஆ ஓதும் நீங்கள், மத நல்லிணக்கத்துக்காக மார்க்கத்தையும், பள்ளிவாயல்களையும் தாரை வார்த்து அல்லாஹ்வின் இல்லத்துக்குள்ளேயே பிறமத வணக்கங்களை செய்யும்/ செய்ய வைக்கும் நீங்கள், ஏகத்துவம் என்றதும் திட்டமிட்டு அடாவடித்தனங்கள் புரிந்து எதிர்ப்பதன் மர்மம் தான் என்ன?

அன்று உங்களோடு நின்று ஏகத்துவத்தை எதிர்க்க யாரை பகடையாகப் பயன் படுத்தியிருப்பீர்களோ அவர்களது இன்றைய நிலமையைப் பாருங்கள். அல்லாஹ்வின் கிருபையால் இன்று அவர்கள் தான் ஏகத்துவத்தைக் காக்கும் அரண்களாக நிற்கின்றனர். இன்று ஏகத்துவத்தை எதிர்க்க யாரைப் பகடையாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறீர்களோ இன்ஷா அல்லாஹ் நாளை அவர்களே ஏகத்துவத்தைக் காக்கும் அரண்களாக நிற்கப் போகின்றவர்கள். இந்த யதார்த்தத்தைக் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?

    நஸீஹத்.
📍➖➖➖📍

ஊர்வழமையை மார்க்கத்தின் அங்கமாக முன்னிலைப்படுத்தி பயணிக்கும் உங்களது மார்க்க விடயங்களை ஏகத்துவவாதிகள் என்றும் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதற்காக நீங்கள் எந்தப் போராட்டத்தை செய்தாலும், உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்தாலும், சிறையில் அடைத்தாலும் ஏகத்துவவாதியிடமிருந்து ஏகத்துவம் அகலாது என்பது உறுதி.

எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறேன் கேளுங்கள்.
📍➖➖➖➖➖➖📍📍➖➖➖➖➖➖📍

நபிகளார் ஒவ்வோர் இபாதத்களையும் எவ்வாறு செய்து காட்டினார்களோ அவ்வாறே உங்கள் ஊர் மஸ்ஜித்கள் அனைத்திலும் நடைமுறைப்படுத்த முன்வாருங்கள். ஏகத்துவத்துக்காக தனியான பள்ளிகள் அமைப்பது தானாக நின்று விடும். அமைக்கப்பட்ட பள்ளிகளும் உங்களது பள்ளிகளும் தானாக ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட ஆரம்பித்து விடும்.

அது உங்களால் செய்ய முடியாது என்றால் அனைவருக்கும் முன்மாதரியான கீழே குறிப்பிடப்படும் ஊர் மக்களைப் போல் நடந்து கொள்ளுங்கள்.

பல ஊர் தலைவர்கள் தமது ஊரை முன்மாதிரி மிக்க ஊர், இஸ்லாமிய கிராமத்தை உருவாக்க பயணிக்கும் குட்டி மதீனா என்றெல்லாம் வாய் கிழிய வர்ணிப்பதை பார்த்துள்ளேன். ஆனால் உண்மையான முன்மாதிரி மிக்கதோர் ஊரை கண்ணால் பார்த்துள்ளேன். இதோ முன்வைக்கிறேன் கேளுங்கள்.

கேகாலை மாவட்டம், மவானல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊர்களில் ஒன்றுதான் உயன்வத்த. அப்பகுதியில் ஏகத்துவவாதிகள் மஸ்ஜிதை நிறுவினர். நிறுவப்படுவது அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித் என்று அவ்வூர் மக்கள் பார்த்தார்களேயன்றி! இயக்க வெறியோடு பார்க்கவில்லை. எப்பிரச்சினையுமின்றி மஸ்ஜித் நிறுவப்பட்டது. *அல்ஹம்ந்துலில்லாஹ்* அவ்வூர் மக்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

அங்கு ஏகத்துவவாதிகள் ஜும்ஆ ஆரம்பித்தார்கள். நானும் அப்பகுதிக்கு அண்மித்து அவ்வூர் மக்களோடு தஃவாவில் இணைந்திருந்த காலமது. குறித்த காலத்தில் பல ஊர்களில் ஏகத்துவத்துக்கு எதிரான சவால்கள் குவிக்கப்பட்டிருந்த காலமது. ஏகத்துவம் இன்றைய அளவுக்கு எழுச்சி பெறாத காலமது. இக்காலச் சூழலில்தான் அந்த ஏகத்துவ மஸ்ஜிதில்  ஜும்ஆ ஆரம்பிக்கப் பட்டது.

அன்றைய நிகழ்வு வரலாற்றில்  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை. காரணம் என்னவென்று தெரியுமா? ஏகத்துவ மஸ்ஜிதின் ஜும்ஆ ஆரம்பித்தலுக்காக விஷேட விருந்தினராக அங்கு வருகைத் தந்திருந்தவர் அவ்வூர் பெரிய பள்ளிவாயல் தலைவர் அவர்களாகும். (அன்னாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக) FM அலைவரிசையில் நேரடி ஒளி பரப்பு செய்யப்பட்ட அந்நிகழ்வில் அன்னாரது உரையும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உப தலைவரான அஷ்ஷேய்க் தாஸிம் மவ்லவி அவர்களது உரையும் இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன. எப்பிரச்சினையுமின்றி அவ்வூர் பெரிய பள்ளியின் தலைவரும் அன்று அங்கு ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டு உம்மத்தின் ஒற்றுமைக்கு உதாரணப் புருஷரானார்.

இன்றும் அவ்வூர் ஒற்றுமையுடன் தத்தமது கொள்கைப் பிரச்சாரங்களையும் கடமைகளையும் அவரவர்களது பள்ளியில் செவ்வனே செய்து வருகிறார்கள். ஏகத்துவ மஸ்ஜிதில் ஜும்ஆ ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே அவ்வூர் பெரிய பள்ளியில் ஏகத்துவவாதிகளுக்கு வாரம் ஒருநாள் பயானுக்கான நாளாக வழங்கியிருந்தார்கள். இன்றும் அதே நிலை தொடர்கிறது.

தம்மைத்தாம் முன்மாதிரியான ஊர் என தற்புகழ் பாடும் ஊர்களுக்கு இந்த உயன்வத்தை முன்மாதிரியாக இருக்கட்டும். உம்மத்துக்குள் அடிதடி வம்பு பிரச்சனை வேண்டாம் என நல்லெண்ணம் கொள்ளும் தலைவர்களுக்கு இவ்வூர் தலைவர் படிப்பினையாக இருக்கட்டும்.

👉அனைவரும் தன் கொள்கைக்கேற்ப நடக்கனும் என நினைப்பது சர்வாதிகாரம்.

👉அடுத்தவர் கொள்கையை மதித்து நடப்பது மனிதாபிமானம்.

👉 ஒரு கொள்கையை சரியென ஏற்று நடப்பவர் இன்னொரு கொள்கையை வலுக்கட்டாயப் படுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என விளங்கிக் கொள்வது புரிந்துணர்வு.

இதை உயன்வத்த மக்களிடமும் தலைவரிடமும் கண்டேன். இம்முன்மாதிரியை பிற ஊர்களும் பின்பற்றினால் உம்மத்துக்குள் ஒற்றுமை தானாக பிறக்கும். நிம்மதி தழைக்கும். ஆங்காங்கே உம்மத்தை பகடைக் காயாக்கி சுயலாபம் தேடும் புல்லுருவிகளது ஆட்டம் அடங்கும். உம்மத்தை ஒன்று படுத்த பள்ளி நிர்வாகங்கள் இம்முன்மாதிரியை பின்பற்ற முன்வருமா?

இவண்
அபூ ஸுமையா- மடவளை பஸார் (05/06/2018)

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.