ரிஸ்வி முப்தி பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்

கடந்த ஷவ்வால் பிறை, நாட்டில் 28 ஆம் நோன்பு வியாழன் மக்ரிப் நேரத்தைத் தொடர்ந்து தென்படலாம் என்றதொரு எதிர்வுகூறலை ACJU வின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் அதற்கு முன் சென்ற வெள்ளிக்கிழமையன்று 
 கொள்ளுப்பிட்டிப் பள்ளிவாயலில் உரையாற்றிய குத்பா பிரசங்கத்தின் போது தெரிவித்ததை இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் அறிவர். 

குறிப்பிட்ட தினத்தில் நாட்டில் பல பாகங்களிலும் பிறை பார்க்கப்பட்டு அன்றை தினம் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடியுள்ள சபைக்குத் தெரிவித்தும் அவர்கள் பிறை சாட்சியங்களை ஏற்க மறுத்துவிட்டனர். 
சாட்சியங்கள் ஏற்கப்படலாம் மறுக்கப்படலாம் எனும் நியதியை நாம் மறுக்கவில்லை. இருந்தும் சாட்சியங்கள் மறுக்கப்பட்டதற்கான காழ்ப்புணர்வு கொண்ட நொண்டிக் காரணத்தை ரிஸ்வி முப்தி அவர்கள் மறு நாள் வெள்ளிக்கிழமை ஆற்றிய தமது குத்பாவில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தது, ஏராளமானோர் கொழும்பு பெரிய பள்ளிவாயல் மற்றும் ACJU வின் மீது வைத்திருந்த நம்பிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளது.

“இம்முறை பிறை சாட்சியம் கூறியவர்கள் அனைவரும் சர்வதேச பிறையை ஆதரிக்கின்றவர்கள், இவர்கள் பிறை விடயத்தை குழுப்புவதற்கு ஏலவே திட்டமிட்டு செயற்பட்டுள்ளனர்” என்று நொண்டிக் காரணம் கூறி சாட்சியத்தை மறுத்திருப்பது தான் விசித்திர வேடிக்கையாக உள்ளது. பிறை விவகாரம் என்பது ஓர் பிக்ஹ் ரீதியான விடயம் என்பதைக் கூட அணுகத் தெரியாமல் சர்வதேசப் பிறையை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்களை காபிர்களாக சித்தரித்து பிறை சாட்சியங்களை மறுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.  பிக்ஹ் மஸ்அலாக்களை முறையாக நடுநிலை பேணி அணுகும் எந்தவொரு முப்தியும் இவ்வாறு செய்திருக்கமாட்டார் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டுவது சாலச்சிறந்ததாகும்.

சர்வதேசப் பிறையை அடிப்படையாக வைத்து செயற்படுபவர்கள் “உலகில் ஏதேனுமொரு இடத்தில் பிறை தென்படுதல்” எனும் நியதியை கையாண்டு முறையாக செல்லும் போது இலங்கையும் உலகிலுள்ள ஒரு பகுதி ஆதலால் இப்பிறையும் ஓர் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு எது எப்படியோ இவர்கள் முஸ்லிம்கள், அன்று சாட்சி கூறியவர்கள் நம்பத் தகுந்தவர்கள் என்று தெரிந்தும் “மாற்றுக் கொள்கையில் உள்ளவர்கள்” என்று கூறிய வண்ணம் காபிர்களைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி சாட்சியங்களை மறைத்து மறுத்திருப்பது நீதமற்ற அநியாத்திற்கு துணை போன செயலாகும்.

ACJU இலங்கை முஸ்லிம்களுக்காக பக்கசார்பற்ற முறையில் பொதுவாக உருவாக்கப்பட்ட சபை என அடிக்கடி மார்பு தட்டிக்கொள்ளும் அதன் தலைவர் மதிப்பிற்குரிய ரிஸ்வி முப்தி அவர்கள் இம்முறை பிறை விடயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதானது, மேற்குறித்த தாரக மந்திரத்தை தவிடுபொடியாக்கியுள்ளது என்பதை நன்கறிந்து கொண்டு “தாம் நீதம் மற்றும் உண்மையை வேண்டி போராடும் இலங்கை முஸ்லிம்களது விவகாரங்களுக்கான உலமா சபையா?” என்று மறுபரிசீலனை நிமித்தம் சுய விசாரணை செய்து கொள்வதே உத்தமமாகும்.

சர்வதேசப் பிறை விவகாரத்தை வைத்து அதன் ஆதரவாளர்களது சாட்சியத்தை மறுத்தது அறிவுடமையா அல்லது நீதமான செயலா?
ACJU உள்நாட்டுப் பிறையை ஆதரிக்கும் சபை என்பதால் சர்வதேசப் பிறை ஆதரவாளர்களது சாட்சியத்தை மறுப்பதற்கு ஏதேனும் நியதி (Theory) அல்லது ஆதாரம் உண்டா? ஏன் இந்த கீழ்த்தரமான காழ்ப்புணர்வு! இதனை தெரிவிக்கும் போது உள்ளம் ஒரு நொடிப் பொழுது கூட உறுத்தவில்லையா? 

ரிஸ்வி முப்தி அவர்கள் சர்வதேச பிறை ஆதரவாளர்களை இழிவுபடுத்தி காழ்ப்புணர்வை வெளிப்படுத்தி காபிர்கள் போன்று சித்தரித்து பகிரங்கமாக தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதோடு பகிரங்கமாகவே மன்னிப்பும் கோர வேண்டும்.

குறிப்பு: ரிஸ்வி முப்தி அவர்களது கண்ணியத்தை நாம் பேணுகிறோம், அத்தோடு அவரது தனித்துவமான விடயத்தை நாம் பேசவில்லை மாறாக அவர் பொதுத் தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ள அநியாயமான கருத்திற்கே நீதத்தை வேண்டி நிற்கிறோம். 

“ரிஸ்வி முப்தி எமக்கு விருப்பமானவர், ஆனால் சத்தியம் ரிஸ்வி முப்தியை விட எமக்கு மிகவும் விருப்பமானது”.

அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனை நடைமுறைப்படுத்தவும், அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனை வாழ்விலிருந்து தவிர்ந்து கொள்ளவும் அருள் புரிவானாக! 

-அல்லாஹ்வே நன்கறிந்தவன்-

நட்புடன் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா
21/06/2018

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.